Thursday, September 13, 2012

பெருமை வாய்ந்த பிள்ளையார்!!!




                                                     பெருமை வாய்ந்த பிள்ளையார்!!!






"கணபதி தாளைக் கருத்திடை வைப்பீர்!
குணம் அதிற் பலவாம்! கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்! அகக் கண் ஒளிதரும்!
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்!'


என்று மகாகவி பாரதியார் அற்புதமாகப் பாடி மகிழ்கிறார். புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்டு "விநாயகர் நான்மணி' மாலை இயற்றினார் தேசிய கவி பாரதி.

விநாயகர் சதுர்த்தியில் அவரைக் களி மண்ணில்தானே காட்சிப்படுத்துகிறோம். எனவே "பூமியே சாமி' என்பதை அவர் நமக்குப் புலப்படுத்துகிறார். விசர்ஜனத்திலும் கடலில் கரைந்து மீண்டும் பூமியோடு ஒன்றாய் ஐக்கியம் ஆகிவிடுகிறார். இந்து மதத் தத்துவங்களிலேயே உச்சியிடம் வகிப்பது ஓங்காரத் தத்துவமே! அந்த ஓங்கார வடிவமாகவே விநாயகர் பொலிகின்றார். "ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றி' என அவரைத் துதிக்கிறோம்.
விநாயகர் முதலாகத் தொழ வேண்டிய தெய்வம் என்பதாலேயே அவருக்கான வழிபாடு தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது.
எல்லா தெய்வ சந்நிதானங்களின் முன்பும் நாம் இரு கை குவித்து கும்பிடு போடுகிறோம்.


தலைமை வழிபாடாகிய கணேசர் வழிபாட்டிற்குத்தான் குட்டுப் போடுவது, தோப்புக் கரணம் போடுவது என இரண்டு அதிகப்படியான வந்தனங்கள்.

மண்ணுலகில் வாழும் நாம் மட்டும்தான் குட்டுப் போட்டு விநாயகரைப் பணிகின்றோம் என்று எண்ணிவிட வேண்டாம்.

"விநாயகனே விண்ணிற்கும்,மண்ணிற்கும் நாதன்' என கபிலர் பாடுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களை ஆற்றும் திரிமூர்த்திகளும் தங்கள் பணி தொடங்கும் முன் விநாயகரை எண்ணிக் குட்டு போட்டுக் கொள்கிறார்கள் என்பது.

"மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்தி முந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கி உன் நாமம் சாற்றிடுவார்'
என்னும் பாடல் வரிகளால் தெரிகிறது.

தேவர்கள் பிள்ளையாரை எண்ணாமல் செய்த தேரில் ஏறி திரிபுரம் எரிக்கச் சென்றார் சிவபெருமான். அத்தேரின் அச்சே முறிந்தது என்பது புராணம்.

பிள்ளையார் வடிவத்தை ஆராய்ந்து பார்த்தால் அனைத்திற்கும் முதல்வர் அவரே என்பதை அறியலாம்.

அவர் ஒற்றைக் கொம்பு - ஏக தந்தம் கொண்டவர்.
மற்றொரு பக்கம் கொம்பு கிடையாது.

ஆண் யானைக்கு தந்தம் உண்டு. பெண் யானைக்கு கிடையாது.
ஆகவே அவர் ஆணாகவும், பெண்ணாகவும், யானைத் தலை உடைமையால் மிருகமாகவும் விளங்குகிறார்.

ஐந்து கரங்கள் உடையவர். பெருத்த வயிறும் குறுகிய கால்களும் பெற்றவர். ஐந்து கைகள் தேவ லட்சணம். குறுகிய கால், பெருத்த வயிறு பூத அம்சம். எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய்,உயர்திணையாய், அஃறிணையாய் எல்லாமாகிக் கலந்து நிறைந்தவராய் விநாயகர் விளங்குகிறார். பொதுவாக "ஆர்' விகுதி தந்தையார், தாயார், பாட்டனார் என்பதற்கே பொருந்தும். சிறப்பு பெற்ற பிள்ளை என்பதால் பிள்ளையார் திருநாமம் இவருக்கு அமைந்தது.

கமண்டல நீரைக் கவிழ்த்து காவிரியை வரவழைத்தார். முருகனுக்கு கல்யாணத்தை நிகழ்த்தினார். நம்பியாண்டார் நம்பிக்கு சகல கலைகளையும் கற்பித்தார். ஒளவைக்கு நொடிப் பொழுதில் கயிலாயப் பேற்றினை அளித்தார்.

மாமேரு மலையிலே வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதி அருளினார் எனப் பல வரலாறுகள் விநாயகர் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு சிறப்பு பெற்ற விநாயகர் எளிமையாக பக்தர்களிடம் இறங்கி வருகிறார்.

களி மண்ணில் வடிவம் போதும்! காகிதக் குடை போதும்! எருக்கம் பூ மாலை போதும்! அருச்சிக்க மலர்கூட வேண்டாம். அறுகம்புல்லே போதும்! என அன்பிற்கு ஆட்படுகிறார் யானைக் கடவுள்.

கடிதமா? பிள்ளையார் சுழி!
கட்டிடமா? கணபதி ஹோமம்!
கல்யாணமா? மஞ்சள் பிள்ளையார்!
காவியமா? கணபதி துதி! - என எல்லாவற்றிலும் முதன்கொள்ளும் பிள்ளையாரை வணங்கி வழிபடுவோம். நம்மையும் அனைத்திலும் முதன்மையாக அவருடைய அருள் ஆக்கும் என்பது உறுதி.

பிள்ளையார்! பிள்ளையார்! ! பெருமை வாய்ந்த பிள்ளையார்!!!

No comments:

Post a Comment