Saturday, September 22, 2012

பரமசுந்தரர்!

நாகதோஷம் நீக்கும் பரமசுந்தரர்!



திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது வாழ்க்கை புத்தகளூர். இங்குள்ள பழைமையான சிவன் கோயிலில் வீற்றிருந்தார் பரமசுந்தரர். அம்பாளின் திருநாமம் பரமேஸ்வரி. தற்போது ஆலயம் சிதிலமடைந்து இறைவனும், இறைவியும் கீற்றுக் கொட்டகையில் அருள்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "புத்தகை' என்ற மகாமுனிவர் சிவனை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டார். நாளடைவில் அவரை புற்று சூழ்ந்தது. அவருடைய கை மட்டும் ஈசனை நோக்கியே இருந்தது. அவருடைய தவத்திற்கு மெச்சிய சிவன், தரிசனம் அளித்து இங்கே கோயில் கொண்டார். இந்த வரலாற்றை நிரூபிப்பதுபோல் இந்த ஊரில் நிறைய பாம்பு புற்றுகள் காணப்படுகின்றன. திருப்புத்தகை என்று அந்த முனிவர் பெயரால் அழைக்கப்பட்ட இந்த ஊர் நாளடைவில் புத்தகளூர் என மருவி தற்போது வாழ்க்கை புத்தகளூர் என்று அழைக்கப்படுகிறது. திருநாகேஸ்வரம், திருப்பாம்புரத்திற்கு இணையாக பாம்பிற்கு பிரதானம் கொடுத்து பேசப்படுகிறது. அடிக்கடி சிவன் அருகே பாம்பு சட்டை உரிப்பதும் கண்கூடாக நடை பெறுகிறது.

பரமசுந்தரர் என்ற பெயருக்கு ஏற்ப மிகவும் அழகாக, நேர்த்தியாக ஆவுடையாருடன் காட்சியளிக்கிறார் சிவபெருமான். அம்பாள் சிலையும் அதே நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பு அழகான தட்சிணாமூர்த்தி சிலையின் பின்புறம் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டின் மூலம் கி.பி. 917ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் கோயிலில் திருப்பணி செய்யப்பட்ட தகவலை அறியலாம். ஞான குரு என்று அழைக்கப்படும் இந்த தட்சிணாமூர்த்தியின் பின்புறமே கல்வெட்டுகள் காணப்படுவது வேறு எங்கும் இல்லாத அதிசயம். வேறு எந்த தெய்வ மூர்த்தங்ளின் சிலைகளும் இங்கு காணப்படாததால் அவை புதைந்து போயிருக்கலாம் என்கிறார்கள்.

பரமசுந்தரரை தரிசித்தால் நாகதோஷம் நிவர்த்தியடையும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கல்வியறிவும், மன அமைதியும் உண்டாகும். ஆலயம் சிதைந்த நிலையிலும் இவ்விரு தெய்வங்களின் சாந்நித்தியம் குறைவில்லை.

தற்போது மெய்யன்பர்கள் சிலர் ஒன்று கூடி இந்த ஆலயத்தை திருப்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். வரும் டிசம்பர் மாதம் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 99400 53289.

No comments:

Post a Comment