Thursday, September 13, 2012

விநாயகர் தரிசனம்!

                                        

                                       விநாயகர் தரிசனம்! விநாயக சதுர்த்தி செப். 19



அண்ணனுக்கு முதல் மரியாதை!: ஞானப் பழத்திற்காக சண்டையிட்டாலும் தான் வீற்றிருக்கும் ஆலயங்களில் அண்ணனுக்கே முதல் மரியாதை கிடைக்கும்படி செய்துள்ளார் முருகப் பெருமான். கழுகுமலையில் வல்லபை விநாயகர், குருந்தமலையில் பால விநாயகர், குன்றக்குடிமலையில் தோகையடி விநாயகர், செஞ்சேரி மலையில் சந்தன விநாயகர், சென்னிமலையில் மலைவழி விநாயகர், மருதமலையில் தான்தோன்றி விநாயகர், விராலிமலையில் மாணிக்க விநாயகர், வள்ளிமலையில் வெற்றி விநாயகர், கந்தகிரியில் பஞ்சமுக விநாயகர், கனககிரியில் செல்வ விநாயகர், குமரகிரியில் வேலடி விநாயகர், இரத்தனகிரியில் வரசித்தி விநாயகர் என்று முருகன் குடியிருக்கும் கோயில்களில் எல்லாம் அருள் புரிகிறார் விநாயகர்.
ஐந்து கரத்தோன்!: விநாயகருக்கு நான்கு கரங்கள். துதிக்கையையும் சேர்த்து அவருக்கு "ஐந்து கரத்தோன்' என்ற பெயர் ஏற்பட்டது. ஐந்து கரங்களில் ஒன்றில்
மோதகத்தையும், மற்றொரு கையில் தேவர்களைக் காக்கும் தந்தமும் ஏந்தியிருக்கிறார். மற்றொரு கையில் தாய், தந்தையை அபிஷேகம் செய்து வழிபடும் பொருட்டு நீர்க்கலசம் தாங்கியிருக்கிறார். ஏனைய இரண்டு கைகளிலும் உயிர்களை ஆணவம், மாயை ஆகியவற்றிலிருந்து காக்கும் பொருட்டு அங்குசமும், பாசமும் ஏந்தியுள்ளார்.

தலையில் குட்டுவதன் வரலாறு!: விநாயகரை தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவது மரபு. இதன் வரலாறு சுவாரஸ்யமானது.
காவிரியை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டி விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டல நீரைக் கவிழ்த்துவிட்டார். பூமியில் விழுந்த நீர் பரந்து விரைந்து ஓடியது.

தியானத்திலிருந்து அகத்தியர் கண்விழித்தார். கமண்டலம் பூமியில் உருண்டு இருப்பதையும், நீர் ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டு கோபமுற்றார். அவருக்கு எதிரில் ஒரு பாலகன் அவரைக் கண்டு சிரித்தான். நீரை சிந்தியதால் ஆத்திரத்துடன் அவனது தலையில் குட்ட முயன்றார் அகத்தியர். சிறுவன் ஓடினான்.

அகத்தியரோ துரத்தினார். இறுதியில் சிறுவன் மறைந்தான். அகத்தியர் திடுக்கிட்டு நிற்க, சிறுவன் விஸ்வரூப விநாயகராக மாறி அவருக்குக் காட்சி தந்தான். விநாயகரின் திருவிளையாடலை அறியாமல் அவரை குட்ட நினைத்ததை எண்ணி வருந்திய அகத்தியர் அந்தத் தவறுக்காக தன் தலையில் தானே குட்டிக் கொண்டார். அதை விநாயகர் தடுக்க, ""உங்களின் முன்னால் தன்
தலையில் குட்டிக் கொள்பவர்களுக்கு புதிய சிந்தனையை வழங்க வேண்டும்'' என்று வரம் கேட்டார் அகத்தியர். அன்று முதல் விநாயகர் வழிபாட்டில் குட்டிக் கொள்ளுதல் இடம் பெற்றது.

விநாயகரின் முன் பக்திப் பரவசத்துடன் நின்று, முகத்தின் மேலுள்ள நெற்றிப் பொட்டுகளில் வலது கையால் இடது பாகத்திலும், இடது கையால் வலது பாகத்திலும் கை விரல்களை இறுக்கமாக மூடிக்கொண்டு ஐந்து முறை குட்டிக்கொள்ள வேண்டும்.
முதல் முறை சுகாலம் பரதரம், இரண்டாம் முறை விஷ்ணும், மூன்றாம் முறை சசிவர்ணம், நான்காம் முறை சதுர்புஜம், ஐந்தாம் முறை பிரசன்னவதனம் என்றவாறு மந்திரத்தை கூறிக் குட்டிக்கொள்ள ஆனை முகத்தானின் அருள் கிடைக்கும்.

வாகனம்!: கிரவுஞ்சன் என்பவன் சவுபரி என்னும் முனிவரின் மனைவியைத் துன்புறுத்தினான். இதனால் கோபம்கொண்ட முனிவர் ""நீ மூஷிகமாகக் கடவது'' என்று சாபமிட்டார். தான் செய்த தவறை உணர்ந்த கிரவுஞ்சன் சாபவிமோசனம் வேண்டினான். முனிவர் கூறியபடி விநாயகரை வழிபட்டு அவருடைய வாகனமாக இடம்பிடித்தான்.


விக்னம் இல்லாத வாழ்வைப்பெற விநாயகனை வழிபடுவோம் 

No comments:

Post a Comment