Tuesday, December 3, 2013

ஐயப்பனுக்கு அறுபடை வீடுகள்


ஐயப்பனுக்கு அறுபடை வீடுகள்

முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதைப் போல ஐயப்பனுக்கும் 6 கோயில்கள் உள்ளன. இவற்றை ஐயப்பனின் "அறுபடை வீடுகள்' என்கின்றனர்.

1. சபரிமலை: சபரிமலையில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக அருள்புரிகிறார்.

2. எருமேலி: கைகளில் வில், அம்பு ஏந்தி வேட்டைக்கு செல்லும் திருக்கோலத்தில் எருமேலியில் காட்சி தருகிறார் ஐயப்பன்.


3. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில் ஆரியங்காவு அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் ராஷ்ட்ரகுல தேவி புஷ்கலையுடன் அரசராகக் காட்சி தருகிறார் ஐயப்பன்.


4. அச்சன்கோவில்: செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அச்சன்கோவில். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. இங்குள்ள ஐயப்பன் விக்ரகம் மிகுந்த பழைமை வாய்ந்தது. இங்கே வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திக் காட்சி தருகிறார் ஐயப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை "கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இவரை வழிபட திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

5. பந்தளம்: பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்ட பகுதியே பந்தளம். அந்த மன்னன் கட்டிய கோயில் இங்குள்ளது. இங்குதான் ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.

6. குளத்துப்புழா: செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது குளத்துப்புழா. இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் "பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டுள்ளது. சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், இந்த ஆறு ஆலயங்களையும் வழிபட, எண்ணிலடங்கா பலன் கிடைக்கும்.


18 படிகளில் தெய்வங்கள்: சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் உள்ள 18 படிகளிலும் 18 தெய்வங்கள் அருள்புரிவதாக வரலாறு.

விநாயகர், சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவையே அந்த தெய்வங்கள்.


மாளிகை புரத்தம்மன்: ஐயப்பன் கோவிலில் மாளிகைப் புரத்தம்மனின் தனி சந்நிதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும். பேச்சுத் திறன் வளரும் என்பது நம்பிக்கை.

தங்க அங்கி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. 41 நாள் மண்டல காலத்தின் நிறைவு பூஜைதான் மண்டல பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இதைக் காணக் கண் கோடி வேண்டும்.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியின் எடை 420 பவுன். திருவிதாங்கூர் மகாராஜாவினால் ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது இது. இந்த அங்கி மண்டல பூஜைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு ஆரன்முழா அருள்மிகு பார்த்தசாரதி கோயிலில் இருந்த ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை கோயில் மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விசேஷ அலங்காரத்துடன் இதை சந்நிதானத்துக்கு கொண்டு வருகிறார்கள். சபரி மலை செல்ல முடியாதவர்கள் இந்த அங்கியை தரிசித்துப் பலன் பெறுகிறார்கள்.