Saturday, December 14, 2013

தினம் ஒரு திருப்புகழ் - திருவடிப் பெற

தினம் ஒரு திருப்புகழ் - திருவடிப் பெற - நாள் 34

ராகம்: ஹேமாவதி / வசந்தபைரவி        தாளம்: ஆதி



நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது ...... மவமேபோய்

நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய ...... நெறியாக

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல ...... மருள்வாயே

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை ...... விடுவோனே

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித ...... வடிவாகும்

அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய ...... பெருமாளே.

கருத்துரை: கொலையே புரிகின்ற அசுரர்கள் அழியவும், 
சமுத்திரம், குளம் போல் வற்றிடவும், முதிர்ந்த மாமரம் 
குறி தவறாது பிளந்து போகவும், கொதிக்கின்ற வேலாயுதத்தை 
விடுத்தவரே!, செந்திலம்பதி செவ்வேளே! சிவபெருமானுக்கு 
பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்தவரே! அடியார்க்கு 
எளியவரே! 

நிலையில்லாத பொருளை பொன்போல் கருதி, வீண்காலம் 
போக்கி, மனத்திண்மை நீக்கி, செவிடாகியும், குருடாகியும், 
நோய்களுடன் ஐம்பொறிகள் தடுமாற்றத்துடன், படுக்கை மீது 
மலமும், நீரும்பெருகி மாள்கின்ற அடியேனுக்கு, வேதங்கள் 
போற்றுதற்கு அரிதான தாமரை மலர் போன்ற திருவடிகளை 
தந்து அருள் புரிவீர்.


தொடரும் திருப்புகழ் ......................................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment