தினம் ஒரு திருப்புகழ் - குறை தீர (நாள் - 40)
ராகம்: கதன குதுகலம் தாளம்: ஆதி
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
ராகம்: அடாணா
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
கருத்துரை: எவ்வுயிர்க்கும் எப்பொருட்டும் இறைவராகிய
சிவபெருமான் வழிபாடு செய்த ஞானமூர்த்தியே கிரவுஞ்ச
மலையும், மாமரமாகி நின்ற சூரபத்மனும் அழியும்படியும்
சமுத்திரம் அஞ்சும்படியும், வேலாயுதத்தை விடுத்த அதி
தீரரே! அடியார்களது இன்னல்கள் அகற்றுபவரே!
திருச்சீரலைவாய் என்னும் திருத்தலத்தில், மகிழ்ச்சியுடன்
உரைகின்றவரே! ஜீவாத்மாவாகிய மங்கையரின் மயக்கம்
நீங்க குளிர்ந்த மாலை நேரத்தில் பரமாத்வாகிய தேவரீரது
திருமார்பிலணிந்துள்ள மலர் மாலையைத் தந்து ரக்ஷித்து
குறை தீருமாறு அணுக மாட்டீரோ?
தொடரும் திருப்புகழ்.............. தொடர்ந்து வாருங்கள்
No comments:
Post a Comment