Sunday, November 24, 2013

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற - நாள் - 14

சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச்


சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே

இரவும்பகல் அந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி


இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ


திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின்

திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே

மருவுங்கடல் துந்திமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே

மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம்இ லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
கருத்துரை:- சண்டையிடும் கருத்துடன் வந்து மன்மதன்
நிற்க, நிலவும் சுடுகின்ற தீயை தன்னுள் வைத்துக் கொள்ள,
விலைமாதர்களின் கண்களில் வசப்பட்டு, மலைச் சாரலில்
உள்ள மணம் பொருந்திய சோலைகளில் தவழ்ந்துவரும்
தென்றல் காற்றும் அங்குள்ள அகன்ற அழகிய சுனைநீரில்
படிந்து வலிவுடனே எழ, இரவும் பகலும் அந்திவேளையும் 
நின்று நிதானமாக குயில் வந்து இசையைத் தெந்தன என்று பாட,
எனது இரண்டு கண்களும் தூக்கம் இல்லாமல் களைத்துப்
போய், இங்கே என் மனம் பதை பதைக்க, காம மயக்கம்
கொண்டு வருந்திய வஞ்சகனாகிய நான் இனிமேல் உன்
மலர்ந்து விளங்கும் திருவடியை அடைவேனோ?


செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் வீடுகளிலிருந்த
தயிரை (திருடி) உண்டவனும், எட்டு திசைகளிலும் புகழ்
பெற்றவனும், வளமான தமிழைப் பயில்வோர்களுடைய
பின்னே திரிகின்றவனும்*, மேக நிறம் கொண்டவனும்,
மிக்க திறல் கொண்டு (மற்போரில்) வெல்லும் வலிமை
வாய்ந்தவனும், வெற்றியும் பரிசுத்தமும் கொண்ட
முகுந்தனுமாகிய திருமால் மகிழும் மருகனே, பொருந்திய
கடல் அலைகளைப் போல, துந்துமிப் பறையும், குடமுழவு
வாத்தியமும் குமின் குமின் என்று ஒலி செய்ய, வளம்
பொருந்திய திருச் செந்தூரில் வந்து எழுந்தருளி உள்ள
முருகனே, திங்களும், சூரியனும், மேகமும் நாள்தோறும்
வானில் செல்வதற்குத் தயங்கும்படி, இவ்வுலகம்
விளங்கும்படியாக வானளாவி வளர்கின்ற திருப்பரங்குன்றத்தில் 
எழுந்தருளி அருளுகின்ற பெருமாளே.
தொடரும் திருப்புகழ் ...................... தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment