Thursday, October 31, 2013

நரகாசுரனுக்கு உதித்த திடீர் கிருஷ்ண பக்திநரகாசுரனுக்கு உதித்த திடீர் கிருஷ்ண பக்தி


தீபாவளி என்றால் நரகாசுரன் சரித்திரம் இல்லாமல் ஏது? தன்னால் மக்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்று மனந்திருந்தி நல்மார்க்கம் நாடியவன் நரகாசுரன். அதனால்தானே பிறந்தது தீப ஒளியைப் போன்ற மகிழ்ச்சி ஒளி மக்களுக்கு.

நரகாசுரன். வாஸ்து புருஷனைப் போன்று இவனும் பூமித் தாயாரின் புத்திரன்தான். பிராக் ஜ்யோதிஷபுரம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தான். ஆட்சிக் காலத்தே அரசர்கள் பலரை துன்புறுத்தினான். பெண்களை சிறை வைத்து கொடுங்கோலாட்சி செய்துவந்தான். அவன் கொடுமைகளைத் தாங்காது, மக்கள் தேவர்களைப் பிரார்த்தித்தனர். தேவர்களோ இந்திரனுடன் கூடி விவாதித்தனர். எல்லோரும் சென்று ஸ்ரீகிருஷ்ணனிடம் சென்று பிரார்த்தித்தனர். தகுந்த நாள் பார்த்து நிலையை சரிசெய்வதாகச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணன், சத்யபாமாவுடன் கூடி, வாகனம் மீதேறி நரகாசுரன் இருப்பிடம் வந்தார். அவனைப் போருக்கு அழைத்தார். போர் உக்கிரமாக நடந்தது. இறுதியில் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். தன் மகன் மீதான பாசத்தால் அவன் இறக்கும் தருவாயில் பூமி தேவி துக்கம் அடைந்தாள். கிருஷ்ணனை பிரார்த்தித்தாள். அந்நேரம் நரகாசுரனுக்கு கிருஷ்ண பக்தி உண்டானது.

"ஸ்ரீப்ரச்ன சம்ஹிதை' என்ற பாஞ்சராத்ர ஆகம சம்ஹிதையில் தீபாவளி விதி குறித்து காணலாம். இதில் நரகாசுரன் ஸ்ரீகிருஷ்ணனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்கிறான்... ""ஸ்வாமி, உம்மால் வதம் செய்யப்பட்டு நான் சுவர்க்கம் செல்கிறேன். என்னால் துன்பப் பட்ட மக்கள், என் பேரால் வீடுகளிலும் கோயில்களிலும் மகிழ்ச்சி பொங்க இதனை உற்ஸவமாகக் கொண்டாடட்டும். எண்ணெய் தேய்த்து, குளித்து, புதியன உடுத்தி இனிய நைவேத்யங்களை உமக்கு சமர்ப்பித்து மகிழ்வுடன் கொண்டாடட்டும்' என்று தன் தவறு உணர்ந்து மனந்திருந்தி வேண்டினானாம்.

ஸ்ரீமந் நாராயணின் ஸ்பரிசம் கிடைத்த மாத்திரத்திலே ஒருவனுக்கு ஞானம் கிட்ட வேண்டும். ஹிரண்யகசிபுவை தனது மடியில் கிடத்தி, அவனைத் தடவிப் பார்த்தாராம் ஸ்ரீநரஸிம்மர். தன் ஸ்பரிசத்தால் இரக்கம், பக்தி, தயை போன்ற குணங்கள் அவனிடம் ஏற்பட்டு மனந்திருந்துவானோ என்று. ஆயினும் அவன் மூர்க்கத்தனத்தைக் கைவிடாதிருந்தான். உக்ர ரூபம் கொண்ட காருண்ய மூர்த்தி நரஸிம்மர் வேறு வழியின்றி, இவன் மனந்திரும்ப வாய்ப்பில்லை என்று உணர்ந்த பின்பே அவன் உடலைக் கீறீக் கிழித்து வதம் செய்தார்.

இங்கும் அப்படியே. ஸ்ரீகிருஷ்ணர் நேரில் தோன்றி, காட்சி கொடுத்ததால் அவன் மனம் மாறவில்லை. கிருஷ்ணரின் ஸ்பரிசம் பட்டதால் அவன் சுவர்க்கம் போவது உறுதியாகச் சொல்ல முடியாது. ஆயினும் பூமாதாவின் பிரார்த்தனையில், நரகாசுரனுக்கு கடைசி நேரத்தில் தோன்றிய கிருஷ்ண பக்தி, அவனுக்கு சுவர்க்கத்தின் மார்க்கத்தைக் காட்டியது. தவறுணர்ந்து மன்றாடிய அசுரனை பரந்தாமன் பரமபதத்துக்கு அனுப்பி வைத்தார்.
எத்தனையோ அசுர வதங்களை பகவான் ஈடேற்றியிருக்கின்றார். ஆனால், அவற்றையெல்லாம் நாம் கொண்டாடுகிறோமா என்ன.. இந்த வதத்தினை மட்டும் கொண்டாடக் காரணம் அந்த அசுர பக்தனது வேண்டுகோளும் அதற்கு பரந்தாமனது சம்மதமும் மட்டும்தானே!

No comments:

Post a Comment