Wednesday, October 30, 2013

சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!

சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!



வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும்.

இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா விட்டாலும், ஒரு சிலவற்றையாவது அனுசரிக்க வேண்டும்.

பூஜா நேரத்தில் பட்டு வஸ்திரம் உடுத்திக் கொள்வது நல்லது. அதிலும், கரை போட்டதாக இருக்க வேண்டும். கரையில்லாத வஸ்திரம் எப்போதுமே உடுத்தக் கூடாது. வஸ்திரங்களில் கிழிசல், தையல் இருக்கக் கூடாது; இவைகளைப் பயன்படுத்தக் கூடாது. பூஜைக்கு மடி வஸ்திரம் உபயோகிக்க வேண்டும். புது வஸ்திரம் நல்லது. பட்டு வஸ்திரம் நனைக்காததாக இருந்தால், திரும்பத் திரும்ப உபயோகிக்கலாம்.

பூஜை முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் முன், கை, கால் அலம்பி, மந்திரம் உச்சரித்து, சாப்பிடுமிடத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு முகமாக உட்கார்ந்து வாழை இலை அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிடலாம். தையல் இலை மற்றும் சில இலைகளில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது, வீண் வம்பு பேச்சு பேசாமல், அன்னத்தை நிந்திக்காமல், பகவத் தியானத்தோடு சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில், வீட்டில் அவசப்தம், அழுகைக் குரல் போன்றவை கூடாது. சாப்பிடுவது நம் சரீர பலத்துக்காக மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கு, அர்ப்பணம் செய்யப்படுவதற்காகவும் தான்.

உத்தரீயம் இல்லாமல் ஒற்றை வேஷ்டியுடனோ, சட்டை அணிந்தோ, உடைந்த பாத்திரங்களிலோ, இலையின் பின்புறத்திலோ சாப்பிடக் கூடாது. சிலர் தாமரை இலையின் பின்புறத்திலும், வாழை மட்டையை சீவி பின்புறத்திலோ சாப்பிடுவதுண்டு; இது கூடாது. வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடுவதோ, தண்ணீர் எடுத்து கை, கால் அலம்பவோ கூடாது. "என்ன சார்... இவ்வளவு சாஸ்திரங்கள் சொல்கிறீர்களே... அனுசரிக்க முடியுமா... என்று கேட்டால், சாஸ்திரத்தில் அப்படியுள்ளது என்ற பதில் தான் கிடைக்கும். முடிந்ததை அனுசரிக்கலாமே!

No comments:

Post a Comment