Monday, May 13, 2013

ஆதி சங்கரர்

ஆதி சங்கரர்





ஆதி சங்கரர் காவி உடை அணிந்து சந்நியாசம் வாங்குவதற்கு அவரது தாயார் ஆர்யாம்பாவுக்கு விருப்பம் சிறிதும் இல்லை. அவரது தாயார் சங்கரரிடம் அவர் சந்நியாசம் வாங்குவதற்கு முன் இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

ஒன்று: தான் இறக்கும் பொழுது, தன் மகன் தன் பக்கத்தில் இருக்க வேண்டும்.

இரண்டு: ஸ்ந்நியாசியாக இருந்தாலும், தன் மகன் தான் தனக்குத் தகனம் செய்ய வேண்டும்.

சிருங்கேரியில் ஆதி சங்கரர் தங்கி இருக்கும் பொழுது, தன் தாயாரின் மரணம் நெருங்கி விட்டது என்று சொல்லி, உடனே தன் தபோ வலிமையால் காலடியில் வசிக்கும் தன் தாயாரின் பக்கத்தில் சென்றடைந்தார். தன் தாயாரின் தகனக் கிரிகைகள் முடிந்தவுடன் தாயாரின் மரணத்தை நினைவு கூர்ந்து, ஐந்து ஸ்லோகங்கள் இயற்றினார். இந்த ஐந்து பாக்களில் மட்டும் தான் கடவுளைப் பற்றியோ, தன் வேதாந்தக் கருத்துக்களையோ சொல்ல வில்லை என்பது இதன் சிறப்பாகும்.

ஸ்ந்நியாசம் வாங்கியதால், மகனாகத் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமுடியாது போய்விட்டதையும், தன் மனச்சாட்சி உறுத்துவதையும் தன் ஐந்து பாக்களிலும் மிக அருமையாக வர்ணித்திருக்கிறார்.

கடைசி வரியில் சொன்ன அவர் வாக்கியம் எவர் மனத்தையும் உருக்கும் என்பது திண்ணம்: மகனாகப் பிறந்த நான் என் தாய்க்குச் செய்ததெல்லாம் மரணத்தின் போது அவளது வாய்க்கு இட்ட ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே!ஐந்து பாக்களின் மொழி பெயர்ப்பு - தழுவலான மொழி பெயர்ப்பு - கீழே தரப்பட்டிருகிறது. இந்த ஐந்து பாக்கள் - மாத்ரு பஞ்சகம் என்ற தலைப்பில் ஆதி சங்கரால் இயற்றப்பட்டதாகும்.

1.

அன்னை நீ! என்னைப் பெற்றவள் நீ!
பெற பெரு வலி பொறுத்தவள் நீ!
ஒன்பது மாதம் சுமந்தவள் நீ!
உடம்பு இளைத்தவள் நீ!
படுக்கையை நாற்றமடித்தவன் நான்!
பாச மழையால் நணைய வைத்தவள் நீ!
என் புகழ், என் பெயர் அத்தனையும்
உன் வலி, உன் அன்பு எதற்கும்
ஈடாகாது, ஈடாகாது, என்றுமே!

2.

காஷாயம் உடுத்த மகனாய் கண்டாய் கனவில் அன்று!
கண்ணீர் விட்டாய், கதறி அழுதாய் அன்று!
கனவு பலித்துக் காஷாயம் பூண்டேன் இன்று!
கட்டித் தழுவி, துயரம் தீரா அன்னை நீ இன்று!
ஆசிரம ஆசிரியர்கள், அன்புத் தோழர்கள்,
அனைவரும் அழுதார்கள் உன்னோடு!
அன்னையே! வெறென் செய்வேன் நான்!
உன் பாதம் வணங்குகிறேன், போற்றுகிறேன் நான்!

3.

பிரசவ வலியால் துடித்த அன்னையே!
பிரார்த்தனையால் வலியை மறந்தனையோ?
சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, ஹரி, முகுந்தா ..
நாமத்தை நம்பினாய் நீ அன்னையே!
நானும் ஜனித்தேன் உன் வலி தீர, அன்னையே!
உன் பாதம் வணங்குகிறேன், அன்னையே!
அதுதான் என் கைமாறு, என் அன்னையே!

4.

மரணத்தில் உன் மரணதாகம் தீர்க்க வில்லை நான்!
மகனாக உன்னைக் காக்கவில்லை நான்!
மரணத்தின் மடியிலே இருக்கையில், அன்னையே!
ராம நாமத்தை உன் காதுகளில் ஓதவில்லை நான்!
நேரம் கடந்து வந்தவன் நான், எதையும் செய்யாதவன் நான்!
பிழைகள் எத்தனையோ செய்தவன் நான்!
அத்தனையையும், ஒப்பற்ற அன்னையே!
அமுதமான அன்பால் மன்னிக்க வேண்டுகிறேன் நான்!

5.

அன்னையே! ஆராதிக்கிறேன் உன்னையே நான்!
பவளம் நீ! பளபளக்கும் ஆபரணம் நீ!கண்மணி நீ!
அன்புத் தெய்வம் நீ!ஆத்மாவின் ஆத்மாவான அந்தராத்மா நீ! -
புகழ்கிறேன் உன்னையே அன்னையே நான்!
அன்னையாய் நீ செய்ததற்கெல்லாம் கைமாறாக
நான் செய்ததெல்லாம்உன் வாய்க்கு
நான் இட்டதெல்லாம்அன்னையே! அன்னையே!
ஒரு கைப்பிடி அரிசியே!

No comments:

Post a Comment