Monday, April 15, 2013

இறை நம்பிக்கை வலுப்படும்

இறை நம்பிக்கை வலுப்படும்!


ஒருநாள் சுவாமி விவேகானந்தர் கோவர்த்தன மலையை
வலம் வந்து கொண்டிருந்தார். யாரிடமும் உணவை யாசிக்கக்
கூடாது, தானாக வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்.

முதல் நாள் மதிய வேளையிலேயே நல்ல பசி. பெருமழை
பெய்யத் தொடங்கியது. அவர் மயங்கி விழும் நிலைமைக்குச் சென்றுவிட்டார். மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று பின்னாலிருந்து யாரோ
அழைப்பது கேட்டது. அதைக் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து
நடந்தார் சுவாமிஜி. வந்தவன் ஒரு பக்தன். "சுவாமிஜி,
உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். சாப்பிடுங்கள்'
என்று கூறியபடியே அவன் பின்தொடர்ந்தான். சுவாமிஜியும்
ராதையின் கருணையை நினைத்து கண்ணீர் பொங்க, அந்த
உணவை ஏற்றுக் கொண்டார்.

ஒரு நாள் சுவாமிஜி ராதா குண்டத்தில் குளிக்கச் சென்றார்.
அந்த நாட்களில் அவர் ஒரு கெüபீனம் (கோவணம்) மட்டுமே அணிந்திருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கிடையாது. அந்தக் கெüபீனத்தைத் துவைத்து உலர வைத்துவிட்டு, குளிக்க நீரினுள் இறங்கினார். கரையேறிப் பார்த்தார், கெüபீனத்தைக் காணவில்லை. மரத்தில் ஒரு குரங்கு அதை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அவரிடம் வேறு துணியும் இல்லை. எப்படி ஊருக்குள் செல்வது? சுவாமிஜியின் கோபம் ராதையிடம் திரும்பியது. "தாயே நான்
ஊருக்குள் போக முடியாது. எனவே காட்டினுள் போகிறேன்.
அங்கேயே கிடந்து பசியிலும் பட்டினியிலும் வாடி சாகப் போகிறேன்' என்று எண்ணியபடி காட்டினுள் நடக்கலானார்.

இங்கேயும் வந்தான் ஒரு பக்தன். அவனது கையில் புத்தம்புதிய
காவித் துணி. அதனை சுவாமிஜிக்கு அளித்தான் அவன்.
கண்ணீர் மல்க அதனை பெற்றுக் கொண்டார் சுவாமிஜி.
திரும்பி குளக்கரைக்கு வந்தால், ஆச்சரியம் சுவாமிஜியின்
கெüபீனம் அவர் போட்ட இடத்திலேயே கிடந்தது.

இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு, வேறு எந்த ஆதரவும் இன்றி வாழ்கின்ற ஒருவனுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை அவனது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.

No comments:

Post a Comment