Tuesday, April 23, 2013

சாய்பாபா ஆராதனை - 24.04.2013இன்று சாய்பாபா ஆராதனை விழா!உலகம் முழுவதும் பக்தர்களைக் கொண்டுள்ள சாய்பாபாவிற்கு, தமிழகத்தில் 905 மையங்கள் உள்ளன. இங்கு வரும் குழந்தைகளுக்கு அன்பும், பக்தியும், ஒழுக்கமும், உண்மையும் போதிக்கப்படுகிறது. பாலவிகாஸ், இளைஞர் அமைப்பு, பஜன் மண்டலி, மகிளா அமைப்பு, சமிதி ஆகிய பிரிவுகளின் கீழ், பக்தர்கள் சமூகத்திற்கு நலன் தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். பாலவிகாஸில் உள்ள குழந்தைகளுக்கு தாய் தான் உன் முதல் கடவுள் என கற்றுத் தரப்படுகிறது. சொல்லிக் கொடுப்பவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் தான், குழந்தைகளை அவ்வளவு அழகாக உருவாக்குகிறார்கள். பாபா, தன் தாய் ஈஸ்வரம்மாவை எந்த அளவு போற்றினார் எனபதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் கொடுக்கும்படி மகனிடம் கூறினார் தாய். அவரது கட்டளையை ஏற்று, வறண்ட அனந்தப்பூர் மாவட்டத்திற்கு குடிதண்ணீர் வழங்கினார். அதன்பிறகு சென்னை வரை உள்ள மக்களின் தாகம் தீர்த்தார்.
ஏழைகள் வைத்தியம் பார்க்க வழி செய்ய வேண்டும், என்று ஈஸ்வரம்மா சொன்னதும், அவர்கள் இலவசமாக உயர்சிகிச்சை பெறும் வகையில் புட்டபர்த்தியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியைக் கட்டினார். பிள்ளைகள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் தான் கேட்டார் பாபாவின் தாய். பாபாவோ, பல்கலைக்கழகமே உருவாக்கி கொடுத்துள்ளார். இப்படி தன் தாயின் விருப்பத்தை செய்து கொடுத்த பாபாவின் விருப்பம், அனைவரும் அவரவர் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான்!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் செக்யூரிட்டி வேலைக்கான பயிற்சிமுகாம் நடத்தப்படுகிறது. பள்ளிப்படிப்பைத் தாண்டாத இளைஞர்களுக்கு இலவச தங்குமிடமும், உணவும் கொடுத்து நடத்தப்படும் இந்த பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நடத்தப்படும் சிறுதொழில் பயிற்சி முகாமில், பயிற்சியுடன் தொழில் நடத்த தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகிறது. சமூகம் புறக்கணித்ததன் காரணமாக சமூக விரோதியாக மாறிய இளைஞர்கள் இன்று நல்லதோர் வாழ்க்கை அமையப்பெற்றுள்ளார்கள் என்றால் அது சாய்பாபாவின் அருளால் தான்.


ஏப் 24., சாய்பாபா நினைவு நாள்: மும்பையிலுள்ள பாலவிகாஸ் பள்ளிக்கு பாபா விஜயம் செய்தார். ஆசிரியர்களும் மாணவர்களும் ரோஜாவைக் கையில் ஏந்தி, அவரை வரவேற்க காத்திருந்தனர். அப்போது, அந்தப் பள்ளியில் படிக்காத சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். மற்ற குழந்தைகளைப் போல தானும் ரோஜாவோடு பாபாவை வரவேற்க ஆசைப்பட்டான். ஆனால், அவனுக்கு மலர் வழங்கப்படவில்லை. வருந்திய அவன், தனக்கெதிரே இருந்த செடியில் மலர்ந்திருந்த சிறுபூக்களைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டான். மாணவர்களை ஆசிர்வதித்தபடி வந்த பாபாவிடம், தன் கையில் இருந்த மலர்களைக் கொடுத்தான். அவர் புன்னகை பூத்தபடி, அவனது பிஞ்சுக்கைகளை பிடித்தார். எளிமையான அந்த மலர்களை வாங்கிக் கொண்டு ஆசிர்வதித்தார். பள்ளியில் மூன்று மணிநேர நிகழ்ச்சி நடந்து முடிந்தது. பாலவிகாஸை விட்டுக் கிளம்பும் நேரத்திலும், அந்தச் சிறுவன் கொடுத்த மலர்கள் பாபாவின் கைகளிலேயே இருந்தன. அந்தச்சிறுவன் நெகிழ்ந்து போனான். தங்கள் ரோஜாவுக்கு கிடைக்காத பெருமை, யாரோ ஒரு சிறுவனின் சிறுமலருக்கு கிடைத்ததை எண்ணி மற்ற மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
உயிர்களை நேசித்தவர்: சாய்பாபா பெங்களூருவிலிருந்து புட்டபர்த்திக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மலைப்பிரதேசமாக இருந்ததால், பாதை கரடுமுரடாக இருந்தது. ஓரிடத்தில், பாம்பு பாதையின் குறுக்கே சென்று கொண்டிருந்தது. பாம்பைக் கண்ட டிரைவர், பின் சீட்டில் இருந்த பாபாவைத் திரும்பிப் பார்த்தார். அவர் தியானத்திலிருப்பதைக் கண்டார். காரை நிறுத்தினால் பாபாவின் தியானம் கலைந்து விடும் என்பதால் பாம்பின் மீது காரை ஏற்றி விட்டு தொடர்ந்து சென்றார். பிரசாந்தி நிலையம் வந்ததும், டிரைவர் பாபாவிற்கு காரின் கதவைத் திறந்தார். இறங்கிய பாபா மெல்ல நடந்து சென்றார். அவருடைய சட்டையின் பின்புறம், மண்ணால் பெரிய பட்டை போட்டது போல அழுக்காகி இருந்தது. இதைக் கண்ட டிரைவர்,சுவாமி! உங்கள் சட்டையில் ஏதோ பட்டை போல் அழுக்காக இருக்கிறதே!, என்றார்.கொஞ்ச நேரத்திற்கு முன் மலைப்பாதையில் ஒரு பாம்பின் மீது கார் ஏற இருந்தது. அதைத் தடுப்பதற்காக காரின் டயருக்குக் கீழே செல்ல வேண்டி வந்தது, என்றார் பாபா.இதைக் கேட்டதும் டிரைவர் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார். புன்னகை தவழ, பாபா பிரசாந்தி நிலையத்திற்கு சென்றார்.
இன்றைய செயல்பாடுகளே எதிர்கால வாழ்வின் ஆணிவேர்


*மனிதநேயம், நல்லொழுக்கம், கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இதனைக் கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை.


*பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.


*ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.


*திட்டங்களை செயல்படுத்துவதில் வரைமுறையுடன் செயல்படாத நாடு ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் செல்லாது.


*கடவுளே அனைத்திலும் அனைத்துமாக இருந்து உலகை இயக்குகிறார்.


*நல்ல எண்ணம், வார்த்தையில் மென்மை, செயல்களில் இரக்கம் கொண்டவர்களே உண்மையான மனிதர்கள்.

*எந்தச் செயலையும் செய்யும் முன்பு, கடவுளை எண்ணித் துவங்குங்கள். உங்களுக்கு அவரருளால் வெற்றியே கிடைக்கும்.

*மனிதனின் அறிவாற்றலை, அவனது குணங்களே நிர்ணயிக்கிறது.

*இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.

*உண்மையாக நடப்பவர்களிடம் நற்குணமும், பிறருடன் இணக்கமாக நடந்து ஒத்துப்போகும் தன்மையும் இருக்கும்.

*ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தாலே போதும். உலகில் அமைதி தானாக வந்துவிடும்.

*உண்மையான நட்பில் அகம்பாவம் துளியும் இருக்காது.

*தியானம் செய்வதால் ஆக்கப்பூர்வமான நற்சிந்தனைகள் உருவாகும்.

*நீங்கள் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கி பத்து அடிகள் எடுத்து வைப்பார்.

*சேவை, கைமாறு கருதாததாக இருக்க வேண்டும். பிறருக்கு செய்த சேவையை வெளிப்படுத்துவதும், அதற்காக பாராட்டை எதிர்பார்ப்பதும் கூடாது.


*ஒவ்வொருவரையும் பிறருக்கு சேவை செய்வதற்காகவே இறைவன் படைத்துள்ளான்.

*நீங்கள் கடவுளை வணங்காவிட்டாலும்கூட, அவர் உங்களுடனேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் சமைக்கப்படும் உணவிற்கு சுவை அதிகம்.

*உண்மை இருக்குமிடத்தில் மட்டுமே அன்பும், அமைதியும், அதன் வடிவமான கடவுளும், அவரது ஆசிர்வாதமும் இருக்கிறது.

*இறைவன் மீது பக்தி செலுத்துபவர்கள் மட்டுமே, எந்த செயலையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

*உண்மையான மகிழ்ச்சி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அதை வெளியில் தேடுவதில் ஒரு பயனும் இல்லை.

*கட்டளையிடாமல், அன்புடன் சொல்லித் தரப்படும் முறையே, சிறப்பானகல்வி முறை ஆகும்.

*பற்றில்லாத வாழ்க்கையில்தான் திருப்தி இருக்கிறது.

*சேவை செய்யப்படும் இடத்தில் மட்டுமே பெரு மகிழ்ச்சியும், துன்பமில்லாத நிலையும் இருக்கும்.

-சாய்பாபா