Friday, March 15, 2013

ஸ்ரீகமலவல் நாச்சியார் திருக்கோயில்


உறையூர் ஸ்ரீகமலவல் நாச்சியார் திருக்கோயில்

சோழர்களின் தலைநகராக இருந்தது உறையூர். இங்கே தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த மன்னன் நந்தசோழன் அரங்கனடிமை பூண்டு ஒழுகினான். புத்திரப்பேறு இல்லாத பெரும் குறை அவனுக்கு. அரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

அரங்கன் கணக்கோ வேறாக இருந்தது. திருமகளை நந்தசோழனுக்கு புத்திரியாகப் பிறக்குமாறு கடைக்கண் காட்டினான்.
உறையூரில் தாமரை ஓடையில் பூத்த தாமரைப் பூவில் குழந்தையாகச் சிரித்தாள் ஸ்ரீதேவி. வேட்டைக்குச் சென்றிருந்த நந்தசோழனுக்கு ஆச்சரியம். குழந்தையைக் கையில் எடுத்தான். மனம் நிம்மதி அடைந்தது. கமல மலரில் கண்டெடுத்ததால் "கமலவல்லி' என்று பெயரிட்டு வளர்த்தான்.
மணப் பருவம் எய்தினாள் கமலவல்லி. ஒருநாள் அரங்கன் குதிரை மீதேறி பலாச வனத்தில் வேட்டைக்கு வந்தான். அந்நேரம் தோழிமார் புடைசூழ வந்த கமலவல்லி, அரங்கனின் பேரழகு கண்டு வியந்தாள். ஒரு கணம் தன் அழகு காட்டி மறைந்த அரங்கனைக் கண்டதும் காதல் கொண்ட கமலவல்லி, பக்தி வெள்ளத்தில் அவன் நினைவில் மூழ்கத் தொடங்கினாள்.
மகளின் நிலைகண்டு செய்வதறியாது விழித்த நந்தன், அரங்கனிடமே சரண் புகுந்தான். அவன் கனவில் வந்த அரங்கன், "குழந்தையில்லா உன் குறைபோக்க யாமே திருமகளை மகவாக அனுப்பினோம். என் சந்நிதிக்கு அழைத்து வா, ஏற்றுக் கொள்வோம்' என்றான். வியந்த மன்னன், பெருமானைப் பலவாறாகத் துதித்தான். நகரை அலங்கரித்தான். கமலவல்லியை மணக்கோலத்தில் அலங்கரித்து திருவரங்கம் அழைத்துச் சென்றான். சந்நிதிக்குள் நுழைந்த அக்கணமே அரங்கனுடன் இரண்டறக் கலந்தார் கமலவல்லி நாச்சியார். பரிவாரங்களுடன் சந்நிதிக்குச் சென்ற நந்தசோழன், காணற்கரிய இக்காட்சி கண்டு சிலிர்த்தான். தான் பெற்ற பேற்றினை எண்ணி வியந்து, திருவரங்கத்துக்கு திருப்பணிகள் பல செய்தான்.


பின்னர் தன் ஊருக்குத் திரும்பியவன், கமலவல்லியின் நினைவாக அழகிய ஆலயத்தை எழுப்பினான். அங்கே அழகிய மணவாளனும் எழுந்தருளினார். அரங்கனே அழகான மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால் அழகிய மணவாளன் ஆனார். துவாபர யுகத்தின் முடிவில் இது நடந்தது என்பர்.

கலியுகத்தில் ஒரு முறை உறையூரில் மண்மாரி பொழிந்து, பட்டணம் முழுதும் முழுகிப் போனதாம். அதன் பின்னர் சோழ மன்னர்கள் கங்கைகொண்டானை தலைநகராக்கி ஆண்டனர் என்றும், பின்னாளில் உறையூரில் மீண்டும் ஒரு சோழ மன்னனால் கோயில் எழுப்பப் பட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது. அந்தக் கோயிலைத்தான் இப்போது காண்கிறோம். இக்கோயிலில் அழகிய மணவாளனையும் (அரங்கநாதனின் திருமணக் கோலம்) கமலவல்லியையும் அந்த மன்னனே பிரதிஷ்டை செய்தானாம்.

பெருமாள் அழகிய மணவாளனாக, வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். தாயார், கமலவல்லி நாச்சியார். உறையூர்வல்லி வடக்கு நோக்கி திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி என தல தீர்த்தம். விமானமும் கல்யாண விமானம்.

திருப்பாணாழ்வார் அவதரித்த தலம் என்பதால், இந்தக் கோயிலில் ஆழ்வாருக்கு தனிச் சந்நிதி உள்ளது. "கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றம்' என்ற பெரிய திருமொழி பாசுரத்தில் நாகப்பட்டினம் சுந்தர்ராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார், அப்பெருமானின் பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானது என்கிறார்.

இந்தத் தலத்துக்கு கோழியூர் என்று பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யம்தான். சிபி சக்கரவர்த்தி இந்த உறையூரில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்துவந்தார். சோழர்களின் முதல் தலைநகராகவும் உறையூரே திகழ்ந்தது. காவிரிப் பூம்பட்டினம் இரண்டாவது கடற்கரைத் தலைநகரமாக விளங்கியதாம். உறையூரை ஆண்ட ஆதித்த சோழன் தன் பட்டத்து யானையின் மீது ஒருமுறை இங்கே வந்தபோது, வில்வ மரத்தின் நிழலில் மறைந்து இருந்த சிவபெருமான் இவ்வூரின் பெருமையை அரசனுக்கு உணர்த்த எண்ணினார். அந்த மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை பெருமான் நோக்க, அது யானையுடன் உக்கிரப் போர் புரிந்தது. தனது கால் நகங்களினாலும், அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி யானையைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ததாம். இவ்வாறு ஒரு கோழி யானையைத் துரத்தியடித்ததால் இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயர் உண்டானதாம். இது பின்னாளில் திருக்கோழி ஆனது என்பர். இவ்வூருக்கு, குக்கிடபுரி, வாரணபுரி, கோழியூர், திருமுக்கீசுரம் என்ற பெயர்களும் உண்டு.

கமலவல்லித் தாயாருக்கும், அரங்கநாதனுக்கும் நடைபெற்ற காதல் நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்களை ஸ்ரீரெங்கராஜசரிதபானம் எனும் வடமொழி நூல் சிறப்பித்துப் பேசும். கமலவல்லி நாச்சியாரை திருவரங்கன் அழகிய மணவாளனாக வந்து திருமணம் புரிந்ததை நினைவுகூரும் முகமாக இன்றும் வருடம் ஒரு முறை திருவரங்கத்திலிருந்து அரங்கன் இங்கே எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் ஏகாசனத்தில் தரிசனம் தருகிறார்.

பரிகாரம்: கன்னிப் பெண்கள் கண் நிறைந்த கணவனை அடையவும், கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும் இங்கே வேண்டிக் கொள்கிறார்கள்.

கருவறையில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டதால் இருவரும் ரங்கநாதரை வடக்கு திசை பார்த்திருக்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள் ஆயில்ய நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். பிராகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சந்நிதிகள் உள்ளன.

பங்குனி சேர்த்தி வைபவம்: திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின்போது, உற்ஸவர் நம்பெருமாள் ஒரு நாள் இத்தலத்துக்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தி தரிசனம் தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தாராம். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலை நம்பெருமாள் பல்லக்கில் அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் அன்பர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் நம் பெருமாள், மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிராகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபம் செல்கிறார். பின் தாயாரும் சேர்த்தி மண்டபம் சென்று, பெருமாளுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். பின்பு தாயார் கருவறை திரும்ப, நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தியாக உறையூர் கமலவல்லி நாச்சியாரும் தரிசனம் தருகிறார். பங்குனி சேர்த்தி விழாவில் நம்பெருமாள் இரண்டு தாயார்களுடன் சேர்ந்து இருப்பதை தரிசிப்பது மிகவும் சிறப்பானது.


திருவிழா: நவராத்திரி, கார்த்திகையில் திருப்பாணாழ்வார் திருவிழா பத்து நாள் நடக்கிறது.

தல சிறப்பு: இந்தத் தலம் தாயார் பிறந்த தலம். தாயாருக்கான சிறப்புத் தலம். தாயாரின் பெயரில் உறையூர் நாச்சியார்கோவில் என்றே வழங்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்ஸவ மூர்த்தியாகவும் உள்ளார். காரணம் இங்கே உற்ஸவங்கள் எல்லாம் தாயாருக்கே. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலை பெருமாள் கடப்பது போன்று, இங்கே தாயார் மட்டும் சொர்க்கவாசல் கடக்கும் வைபவம் மாசி தேய்பிறை ஏகாதசியில் நடைபெறுகிறது. இங்கே பெருமானுக்குரிய எல்லா வழிபாடுகளும் கமலவல்லித் தாயாருக்கே நடக்கிறது.
சந்நிதி திறக்கும் நேரம்: காலை 6-12 வரை, மாலை 5-8 வரை.

இருப்பிடம்: திருச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது உறையூர்.

தகவலுக்கு: 0431-2762446