Tuesday, March 12, 2013

திமிரி பாஷாண லிங்கம்


மருத்துவ குணத்துடன் மகேசன்!
தெய்வாம்சமும் மருத்துவகுணமும் இரண்டறக் கலந்த ஒரு பாஷாண லிங்கத்தை வேலூர் மாவட்டத்தில் உள்ள திமிரி என்ற ஊரில் தரிசிக்கலாம்.

ஆர்க்காடு - ஆரணி சாலையில் ஆர்க்காட்டிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது திமிரி. இங்கே பழைமையான சோமநாத ஈஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் ஆலயம். சமீப காலத்தில் தோன்றிய கோயிலாக இருந்தாலும் இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூர்த்தம் பழைமை வாய்ந்தது.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் சதாசிவராயர் என்பவர் இப்பகுதியை ஆட்சி புரிந்தார். அவரின் விருப்பப்படி ராஜவைத்தியர் தன்வந்த்ரி வைத்திய முறையில் நவபாஷாணத்தில் ஒன்றான திமிரி பாஷாணத்தைக் கொண்டு ஒரு பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார்.

இதன் உயரம் 6 அங்குலம் மட்டுமே. சிருங்கேரி மடத்தின் 12வது பட்டம் சங்கராச்சாரியார் அருளாசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

காலப்போக்கில் அந்நியர் படையெடுப்புகளில் இருந்து பாதுகாக்க எக்காலத்திலும் அழியாத வண்ணம் புவியியல் தத்துவத்தின்படி வேதியியல் கலவையான முக்கோணப்பெட்டகத்துள் வைத்து திமிரி சோமநாத ஈஸ்வரன் ஆலயத்து திருக்குளத்தில் புதைத்து மறைக்கப்பட்டிருந்தது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் சிவனடியார் ஒருவர் மூலம் வெளிப்பட்ட இந்த லிங்கம் ஒரு சிறிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

நவபாஷாணத்தில் ஒன்று திமிரி. இதற்கு "தீ' என்று பொருள். எனவே புகையும் தன்மை கொண்டது. ஆகையால் எப்போதும் நீரிலேயே அமிழ்ந்திருக்க வேண்டும். எனவே குளிர்ந்த, தூய்மையான நீர் நிரம்பிய கண்ணாடிப் பெட்டியில் பாஷாண லிங்கேஸ்வரர் அமர்த்தப்பட்டுள்ளார். தரையில் கூர்ம பீடம். அதன் மேல் ஐந்து தலை நாகம். இதன் மீது தாமரை பீடம். அதன் மேல் கண்ணாடியில் உருவாக்கப்பட்ட ஆவுடையார் மீது பாஷாணலிங்கப் பரமேஸ்வரன் தண்ணீரில் காட்சியளிக்கிறார்.

தினசரி பூஜையின்போது லிங்கத்தைச் சுற்றியுள்ள நீர் மாற்றப்படுகிறது. வெளியே எடுக்கப்பட்ட தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவார, திருவாசக பாராயணங்களுடன், வில்வ அர்ச்சனையும் செய்யப்படுகிறது. மாத வழிபாடாக பௌர்ணமி நாட்களில் தேன் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பாஷாண லிங்கத்தின் அபிஷேக நீரும், அபிஷேகத் தேனும் அனைத்து விதமான மருத்துவ குணங்களும் கொண்டவை. எனவே பக்தர்கள் அதனைப் பெற்றுக்கொண்டு பயனடைகிறார்கள்.

ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா, சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அவ்வகையில் வரும் சிவராத்திரி நன்னாளில் (மார்ச் 10ஆம் தேதி) முதல் கால பூஜை காலை 6 மணிக்கும், இரண்டாம் கால பூஜை மாலை 6 மணிக்கும், மூன்றாம் கால பூஜை இரவு 10 மணிக்கும் நான்காம் கால பூஜை மறுநாள் காலை 6 மணிக்கும் நடைபெற இருக்கிறது. மூன்றாம் கால பூஜையின்போது இரவு 10 மணிக்கு ஒரு கோடி பஞ்சாட்சர வேள்வி நடைபெறுவது சிறப்பு.

இங்குள்ள இறைவன் பெயர் சந்திரசேகர சோமநாதீஸ்வரர். பிரதிஷ்டை செய்யப்பட உள்ள அம்பிகையின் பெயர் சந்திரகலா சோமநாயகி. தற்போது தானிய வாசத்தில் இருக்கிறார்.

மேலும் விநாயகப்பெருமான், முருகன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், நால்வர், நந்தியெம்பெருமான் சந்நிதிகளும் அமைந்துள்ளன. ஆலயத்திற்கு வெளியே வில்வ மரத்தின் கீழ் அகஸ்திய முனிவர் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

ஆலயத்தில் புதிய கொடிமரம் அமைக்கும் திருப்பணியும், அம்பிகை பிரதிஷ்டையும் நடைபெற வேண்டியுள்ளது.

தகவலுக்கு: 93447 30899.

(சென்னை கோயம்பேட்டிலிருந்து தடம் எண் 202 திமிரிக்கு செல்கிறது)

தகவல் : வெள்ளிமணி தினமணி