Wednesday, January 2, 2013

திருப்பாவை பாடல் 19 - திருவெம்பாவை பாடல் 19

திருப்பாவை பாடல் 19  

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் 
ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான 
பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய 
நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் 
மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! 
நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை 
உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய 
கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் 
இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் 
கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து 
விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு 
தகுதியாகுமா?
விளக்கம்: பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை,
இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை
ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட
மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது
தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா?
அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன்
ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.
நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை
எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம்
சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை
காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை
கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார்
எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து
கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன்
வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை
கிடைத்தால் போதும் என்கிறார்கள்.திருவெம்பாவை பாடல் 19


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
பொருள்: உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள்
உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு
தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம்
செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி
இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத்
திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும்
என்று உன் னிடம் கேட்கும் உரிமையுடன்
விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர்
உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி
செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய்
இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு
பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும்.
பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது.
இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங் களுக்கு
தருவாயானால், சூரியன் எங்கே உதித் தால்
எங்களுக்கென்ன?

விளக்கம்: அக்காலத்தில், பெண்கள் எத்தகைய
மணவாளன் தங்களுக்கு அமைய வேண்டும்
என்று கேட்கும் உரிமை இருந்திருக்கிறது.
அதனால் தான் ஒரு பக்தன் தங்களுக்கு கணவனாக
வேண்டும் என்றார்கள். அது மட்டுமல்ல! நல்ல
கணவன் அமைந்து விட்டால், கிரகங்களின் மாற்றம்
கூட ஏதும் செய்யாது என்று உறுதியாகச் சொல் கிறார்கள்.
இறைவனை உறுதியாக நம்புவோருக்கு கிரகங்களின்
தாக்கம் இல்லை என்பது இப்பாடல் உணர்த்தும் உட்கருத்து.