திருப்பாவை பாடல் - 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
விளக்கம்: ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
திருவெம்பாவை பாடல் 2
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பொருள்: ""அருமையான அணிகலன்களை அணிந்த
தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும்
போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது
நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம்
பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால்
வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய்,
என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து
தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து
விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள்.
அவளுக்கு பதிலளித்த தோழியர் கண்களை கூசச்செய்யும்
பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை
வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால்,
அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு
முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான்.
அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய
சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன்
மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே
புரிந்து கொள்வாயாக, என்றனர்.
விளக்கம்: தேவலோகத்தில் சிவபவனி கிடையாது.
அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம்
முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா.
சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில்
இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது
இப்பாடலின் உட்கருத்து.
No comments:
Post a Comment