வஷிஷ்ட் பாரதி வம்சா வளி By: Grand Son S.S.Vasan
அவருடைய இஷ்ட தெய்வமாகிய விநாயகரை வணங்கி தொடருகின்றேன்
கவி
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லலாம்,
ஆய சாலை யரும் பெறலன்பினான் ,
நேய நெஞ்சின் விரும்பி நிரப்பினன்" ----கம்பர்
என்பதுபோல் நமக்கு இங்கு நிரப்பினன். எல்லாம் ஸ்ரீ ராமன் அருள். எல்லோருக்கும் போஜனம் செய்வதற்காக சங்கரியம்மாளும் மற்றவர்களும் நூறு பேருக்கு வேண்டிய சாப்பாடுகள் தயாராக்கினர். சுவாமி நிவேதனம் செய்த பிறகு பிராமணரோடு பாரதியார் உண்ட பிறகு , சோளகரும் அங்குள்ளவர்களும் அப்படியே சாப்பாடு நடந்ததும் சோளகர்
"பட்டுப்புடவைதனைக் கட்டி பர தேவதைப்போல் முன்வந்து,
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் மலர்போல் சோற்றில் நெய் வார்த்து
கெட்டிப் பருப்பும், குழம்பு ரசம் கிளரும் துவட்டல் தயிரோடு
இட்ட சங்கரியம்மாள் கைக்கிடுவேன் தங்க கடயன்களே"
என்று சோழகர் உபசாரம் சொன்னதாகக் கேட்டிருக்கிறேன். இது நடந்த வருடம் பரசுராம பாரதியாரின் 60௦-வது ஆண்டு, ஆதலின் அவருக்கு தெயவீகமாகவே வீட்டிற்கு அக்னி வாதயைச் செய்து மனையைப் புதுப்பிக்க வைத்து அவருக்கும் அறுபதாம் ஆண்டின் கலியாணத்தை கடவுளே சோழகர் மூலமாய் நடத்திவைத்ததாகக் கொண்டாடினார்கள். இவர் எப்பொழுதும் காலை 5 மணிக்கு முன்னமே விழித்துக்கொள்வார் . எழுந்து கை கால் சுத்தி செய்து வீபுதி தரித்து ஸ்ரீ ராம நாமத்தை ஜபம் பண்ணிக்கொண்டு இருப்பார்.
பொழுது விடியும்முன் காவிரி சென்று ஸ்நானம் ஜபம் உபஸ்தானம் அச்வத பிரதக்ஷணம், விநாயக தர்சனம் செய்து கொண்டு வீட்டிற்கு வருவார். வந்து பூஜை, ராமாயண பாராயணதிகள் செய்து கொண்டு அதற்குமேல்
ஆகாராதிகள் செய்வார். அப்பால் ஸ்ரீ ராமனை தியநித்துக்கொண்டு ஏகாந்தமாய் இருப்பார், அப்பால் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீ ராம நாடக கீர்த்தனங்களை தானும் பாடிக்கொண்டிருப்பார், பிறருக்குஞ் சொல்லிகொடுபார். இப்படி இருக்கையில் இவருக்கு வயது 75-க்கு மேல் ஆயிற்று. இவருடைய மூத்த முமாரன் ஸ்ரீ ராமஸ்வாமி பாரதிக்கு புதுக்கோட்டைக்கு மேற்கு சிகாகிரி என வழங்கும் குடுமியாமலை பரமேஸ்வர அய்யர் குமாரி காமாட்சியை கல்லியாணம் செய்து வைத்தனர். மற்றுமுள்ள பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் கலியாணம் ஆகிவிட்டது மூத்த குமாரன் ராமஸ்வாமி பாரதிக்கு ஒரு பிள்ளை பிறக்க அப் பேரனையும் கண்டு மகிழ்ந்தார்.
இப்படி இருக்கையில் ஒருநாள் இரவு இரண்டுமணி நேரத்தில் வழக்கம்போல அயல் வீட்டு பிராமணர் ஒருவர் அழைப்பதுபோல் சப்தம் கேட்க விடியற் காலமென நினைத்து ஸ்நானத்திற்கு இருவரும் புறப்பட்டு காவேரிக் கரைக்குப் போனார்கள். அங்கு வேறு ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது வானத்தைப் பார்த்து நட்சத்திரங்களின் நிலைகளால் ஓஹோ விடியும்முன் நேரத்தில் வந்துவிட்டோம் இன்னும் நாலு ஐந்து நாழி இருக்கிறது என்று நினைத்தார் . நினைக்கவே மனதில் அச்சம் எழுந்தது
சாஸ்திரிகளே என்று கூப்பிடும் பொழுது அவரும் காணவில்லை.
பரசுராமா ராம நாமத்தை சொல்லிக்கொண்டேயிரு பயபடாதே என்று சப்தம் மாத்திரம் கேட்டது. பாரதியாருக்கு அச்சமும் மிச்சமாய் எழுந்தது.கூட வந்த சாஸ்திரிகளைக் காணூம் சப்தமோ கேட்டது நமது பேரைச் சொல்லி இங்கு கூப்பிட்டவர் யார் என்று சிந்தித்தார். அந்த இரவில் மீண்டு திரும்பி தெருவுக்குள் போகவும் மனம் துணியவில்லை. இந்நிலையில் வந்தவர் யாரோ அறியாமல் மோசம் போனேனே என்று அங்கேயே நின்று வாய் விட்டு கதறி ராமனாமமே கதியென்று விடியுமளவும் சொல்லிக்கொண்டு அந்தக் காவேரிக்கரையில் இருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கிழக்கு வெளுக்க கரிச்சான் கூவியது, காக்கை கரைந்தது பொழுது விடிந்து பாரதியார் ஸ்நானம், நியமம் முடிந்தது வழக்கம் போல் வீடு வந்து சேர்ந்தார்.
இப்படி இருந்து வயது 80க்கு மேலும் ஆகியது. இவர் தனது 81-வது வயதில்
மனைவி, மக்கள் , பேரன், பேத்தி, பல சுற்றம் சூழ திடசரீரியாகவே மரணகாலத்தை எதிர்பார்த்து இருந்த காலத்திலேயே ஸ்ரீராமனை தியானம்
செய்துகொண்டு தனது ஆவி துறந்தார் இவர் அரிய சேஷ்ட குமாரராகிய
ராமஸ்வாமி பாரதிகளும் மனைவி மக்களோடு 35-வது ஆண்டில் தனது
தந்தைக்குரிய கடனை செய்து மனை வாழ்க்கையைக் கைக்கொண்டு
மற்றயோரை ஆதரித்து தந்தையைப் போல் தன்னை யாவரும் மதிக்க
வாழ்ந்து வந்தார்.
08-02-1936 நேசன் தொடர்ச்சி
ராமஸ்வாமி பாரதி
--------------------------------
இவர் பரசுராம பாரதியின் மூத்த மைந்தர் , காலக்கிரமத்தில் விதாயரம்பம் எட்டாவது வயதில் உபநயனம் செய்வித்து வேத அத்யானத்தயும் செய்வித்தார் தமக்குத் தெரிந்த தமிழ்பாஷயையும் கற்பித்து வைத்தார். இத்துடன் தமிழ் கணிதங்களும், நூல் முறைப்படி(இலக்கம், நெல்ல்லிலக்கம், எண்சுவடி , குழி மாத்து , கீழ் வாய்க் கணக்கு) முதலிய நூல்களும் கற்பிக்கப்பட்டன
சட்டம், சரவை(பெரிய எழுத்து சின்ன எழுத்து) முதலியன எழுதவும் ஓலைகளை வாரவும் சுவடிகள் சேர்க்கவும் நன்றாய் பழகினார்.
இவர்க்கு தந்தையின் பால் உள்ள கல்வித் திறன்கள் யாவும், ' குல வித்தை கல்லாமல் வரும்' என்பதை ஒத்து சிறிது பழகவே அவைகள் மிகவும் பெருகியது. அன்றியும் தாய் தந்தையர் மாட்டு அதிக நேயம் பிறந்தமையால் , நாள் தோறும் தான் செய்யும், தெய்வ வணக்கத்தோடு அவர்களையும் வணங்குவது வழக்கம். இவருக்கு இராம பக்தியும் தந்தயினிடத்தே நின்று பெருகியது.
இராமஸ்வாமி பாரதி தந்தை இல்லாத சமயத்தில் பக்கங்களிலுள்ள நண்பர்களிடம் பேசும்போது சில கவிகளை தந்தைபோல் சொல்லுவதும் பொருள்களை கூறுவதும் கேட்ட சில பெரியோர்கள் அஹா விரை ஓன்று போட்ட சுரை ஓன்று வருமா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? இந்த இளம் பிராயத்திலேயே விளையும் பயிர் முலையில் தெரியும் என்பதுபோல் இவர்க்கும் தமிழ் மணம் வீசுகிறது. வாக்கு நன்றாய் இருக்கிறது என்றார்கள். வயது சென்ற சோழகரும் இவரை குட்டி பாரதி என்றே சொல்லிக் கூப்பிடுவார்.
இவருக்கு வயது இருபது. இத்தருணத்தில் அச்சோழகர் காலத்தை வீண்போக்கல் ஆகாது என தங்கள் தெருவில் கல்விக்கூடம் ஒன்றைக் கட்டி அதில் பத்து பிள்ளைகளைச் சேர்த்து கொடுத்து இவர்களுக்கும் கண்ணைத் திறந்துவிடுக்ன்கள் என்று உபாத்தியாயராக அமைத்தார். இதற்காக வீட்டிற்கு ஒரு கலம் நெல் ஆக வருடத்திற்கு பத்து கலம் நெல் என்று ஏற்பாடு
செய்தார். தந்தையார் ஒருநாள் கம்பராமாயண சுவடியை எடுத்து ஆசிர்வாதித்து கொடுத்து நீ நாள் தோறும் பாராயணம் செய்வதோடு மாலையிலாவது இரவிலாவது என்னைப்போல் நீயும் கதை சொல்லிப் பழகவேண்டும் என்று கொடுத்தார். இவர் இதை அன்போடு பெற்று
தந்தையை நமஸ்கரித்து தனக்கு அரியதோர் புதிய வாழ்வு வந்தெய்தியதாக மகிழ்ந்தார். மறுநாள் ராமநவமி மகோற்சவம் அதில் ஸ்ரீ ராமரை ஆராதித்து பானகம், நீர் மோர் பழம் சுண்டல் நிவேதித்து பிராமணர்களுக்கும் மற்றுமுள்ளவர்களுக்கும் கொடுத்து அன்றே கதை சொல்லவும் ஆரமித்தார்.
மறுநாள் வழக்கம்போல் பாராயணம் செய்ய ஆரம்பிக்கும்போது முதல் ஏட்டின் பிளவுக்குள் ஒரு சிறிய நறுக்கு இருக்கக் கண்டு அதை எடுத்துப் பார்த்துப் படிக்கும்போது தன் தந்தை கையினால் எழுதிய கவி ஓன்று இருக்கக் கண்டார் அது வருமாறு.
"எந்தை தன் தந்தை தந்தை
எனுமொரு குலங்கள் மூன்றும்
மைந்தர் தம் மைந்தர் மைந்தர்
வழி வரு குலங்களெல்லாம்
உந்தன் பொற் பாதங்கட்கே
உற்றிடும் அடிமையாவோம்
செந் திரு மான் மணாளா சீ ராமா
போற்றி! போற்றி !! "
இக்கவியின்படி நாமும் ராமனுக்கு அடிமைதான் என்று நினைத்தார் . நிற்க ஒருநாள் தந்தையை வணங்கி எனக்கு ஏதேனும் உபதேசம் அனுக்கிரகம் செய்யவேண்டுமென்று பணிந்து கேட்க அவர் கம்பராமாயணத்தின் பாயிரத்தின் நூற் பயனாக கூறியுள்ள
" நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேறியங்க மலை நோக்கம்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள் வலி கூறுவார்க்கே "
ஆறம், பொருள், இன்பம் வீடு என்னும் நாற் பயனும் கிடைக்கும் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும். சத்ரு சம்ஹாரம் செய்த "ஸ்ரீ கோதண்டபாணி குறை கழலன்றி நமக்கு வேறு யாது துணை ?. இதை விடாது சிந்திக்க வந்த தீவினை சிந்திப்போம் இதுவே உபதேசம் என்றார்.. தகப்பனார் உபதேசித்த பிரகாரம் இந்தக் கவியை 108 தரம் ஆவர்த்தி செய்து வந்தார் . இவருக்கு 30-வது வயதில் கலியாணம் நடந்தது. இவர் மனைவி பெயர் காமாக்ஷி . இவருக்கு முப்பத்தைந்தாவது வயதில் மூத்த குமாரன் பிறந்தான் அவன் பெயர் பட்டாபிராமன் என்று மறு பெயர் கொண்ட பிச்சு பாரதி. இது அவர்களின் முன்னோர்களின் பெயர். இவருடைய ஜாதகத்தைப் பார்க்க இவர் 60௦ வயதில் யோகீச்வரராவார் என்றும் ராஜாக்களுக்கு குருவாக இருப்பார் என்று ஜாதகத்தில் இருந்தபடியே இவர் பின் அனுபவத்தில் குடும்ம்பம் நீங்கி சரபோஜி மகாராஜாவுக்கு ஒருவகையில் குருவாக கொண்டாற்றப்பெற்று தஞ்சையில் இருந்தார்.
.........தொடரும்
No comments:
Post a Comment