திருவண்ணாமலையில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்
ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலுடன் இணைந்த திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் நடைபெற்றது.
வில்லிபுத்தூருக்கு வடமேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. மலையின் மேல் கோயிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதனை மக்கள் தென்திருப்பதி என்றும் அழைப்பார்கள்.
திருவண்ணாமலையில் திருக்கைகளை திருவடியைக் காட்டியவாறும், அவ்வாறே அவரின் திருவடியை சரணடைந்த பக்தர்கள் தங்கள் துன்பத்தை முழங்கால் அளவு வெள்ளத்தைக் கடப்பது போல எளிதாக கடந்து விடுவார்கள் என்பதை உணர்ந்த மற்றொரு கரத்தை திருத்தொடையில் பொருத்தியும், இரு கரங்களிலும் சக்கரமும், சங்கும் ஏந்தியும், திருமார்பில் மகாலட்சுமியுடனும், உயர்ந்த கிரீடம் தரித்து, கருணை பொங்கும் கண்களுடனும், அழகிய புன்முறுவலுடனும், இடையில் வாளுடன் எட்டடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறார்.
இம்மலை மேல் ஏறுவதற்கு வசதியாக 240 படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் கோனேரி என்னும் குளம் அமைந்துள்ளது. திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளை இவருக்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுவதால் இக்கோயில் தென்திருப்பதி என்றும் போற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி சனி வாரங்களில் உற்சவம் நடைபெறும். இதனையொட்டி அதிகாலை திருமஞ்சனம், காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் உச்சிகால பூஜையும் இரவு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது.
No comments:
Post a Comment