Wednesday, September 5, 2012

திருகாட்கரை திருவோணம்


                                                     திருகாட்கரை திருவோணம் 




ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஓன்று
கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் உள்ளது.
இந்த கோவிலில் வாமன அம்சமாக எழுந்தருளி இருக்கும்

திருமால், தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் புரிகிறார்.
திருக்காட்கரை அப்பன் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படும்
இந்த பெருமாள் தனது நான்கு கரங்களில் சங்கு, சக்கரம்,
கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி இருக்கிறார்.
தாயார் பெருஞ்ச்செல்வ நாயகி , வாத்சல்யவல்லி என்னும்
திருப்பெயரில் விளங்குகிறாள். விருத்த விமானம் எனப்படும்
விமானத்துடன் கூடிய இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும்
மகாலட்சுமிக்கும் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள சிவலிங்கம்
மகாபலி சக்ரவர்த்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

முதன் முதலில் இந்த கோவிலில் தொடங்கப்பட்ட ஓணம்
திருவிழாதான், காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும்
பரவியதாக கூறப்படுகிறது. கபில முனிவர் இந்த தளத்தில் உள்ள
பெருமாளை வழிபட்டதால் இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரை
தான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி
நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும்
கூறப்படுகிறது.

திருகாட்க்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு
மிகவும் சிறப்பு பெற்றதாகும், பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள்
நிறைவேற ஓணம் பண்டிகையன்று நேந்திரம் குலையை
தொழில் சுமந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று
சமர்பிப்பதை காணலாம். அந்தக்குலைகள் கோவிலில்
முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன
வீட்டிலும் ஓணம் பண்டிகை நாளன்று மரத்தாலான
'திருக்காட்கரை' அப்பன் சிலை வைத்து வழிபாடு
நடைபெறுகின்றது.


வழிகாட்டி:- எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் உள்ள அங்கமாலி இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

No comments:

Post a Comment