Thursday, September 6, 2012

கள்வர்களிடமிருந்து காத்த கண்டியம்மன்!


கள்வர்களிடமிருந்து காத்த கண்டியம்மன்!




திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ளது கண்டியம்மன் கோவில் கிராமம். இங்கே நடந்த ஒரு சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது.

முன்னொரு காலத்தில் இந்தக் கிராமத்தில் அடிக்கடி திருடு போனது. இதனால் மக்கள் மிகுந்த துன்பத்தை அனுபவித்தனர். இன்னல்களிலிருந்து தம்மை காப்பாற்றுமாறு கண்டியம்மனை வழிபட்டனர். அவர்களின் துயரக் குரலுக்கு அம்மனும் செவிசாய்த்தாள். கள்வர்கள் திருடப்போகும் வீட்டில் உள்ளவர்களின் கனவில் தோன்றும் அம்மன் கள்வர்கள் வரும் தகவலை முன்கூட்டியே தெரிவித்துவிடுவாளாம். இதனால் கள்வர்களும் திருட முடியாமல் போனது. ஆத்திரமடைந்த திருடர்கள் அம்மனின் சிலையை விறகுக் கட்டைகளால் மூடி தீ வைத்தனர். இதனால் சிலை இரண்டாகப் பிளந்தது. அதன்பின் வேறு சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர் மக்கள். தீயில் இரண்டாகப் பிளந்த சிலை இன்றும் உள்ளது. கண்டியம்மன் பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்படுவது சிறப்பு.

இக்கோயிலில் ஈசன் "கண்டீஸ்வரர்' என்னும் பெயரில் அருள்புரிகிறார். கண்டி மகா முனிவரால் உருவாக்கப்பட்டதாம் இக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசர்களால் திருப்பணி செய்யப்பட்டதாம். கோயிலை வலம் வருகையில் வலம்புரி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், நயினார் சாமி, கருணாம்பிகை, நவகிரகங்கள் ஆகியோரை தரிசிக்கலாம். தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. ஈசானியத்தில் சிறிய குளம் அமைந்துள்ளது. அதன் அருகே கோயிலின் தீர்த்தக் கிணறு வட்டமாக அமைந்துள்ளது. என்றும் வற்றாத நீருள்ளது இந்தக் கிணறு.

இக்கோயிலில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ பூஜைகள் சிறப்பானவை.அன்னாபிஷேக பெருவிழா ஐப்பசி மாதம் நடக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலுக்கு தற்போது திருப்பணி நடந்து வருகிறது. திருடர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றிய கண்டியம்மனை வழிபடுவோம். என்றும் தீராத சந்தோஷம் அடைவோம்.

மேலும் தகவலுக்கு: 97901 88511.


கள்வர் பயம் நீங்க  கனவில் வந்த கண்டியம்மனை வேண்டுவோம் 

No comments:

Post a Comment