Tuesday, September 25, 2012

குருவாகி வந்த பரமன்!

குருவாகி வந்த பரமன்!




மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகத்தில் வரும் திருவெண்பாவில் 3வது பாடல் இது. திருப்பெருந்துறை உறை சிவபெருமானை வணங்கிப் போற்றும் பாடல்.

"குருவாக வந்தமர்ந்து என் இருளகற்றும் இறைவன் அவன்' என்று நம்பிக்கை மீதுறப் பாடிய பாடல் இது.


""செய்த பிழையறியேன்
சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின்
உயிர்ப்பறியேன் - வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென்
சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்''

- ""பெருமானே... நான் செய்த பிழைதான் யாது? அதை அறியேனே! எம்பெருமானே உன் சிவந்த திருவடியையே கை கூப்பி வணங்கி சிந்தையில் கொண்டேன். நான் பிழைத்திருக்கும் வழியின் தோற்றத்தையும் யான் அறிந்திலன். இருப்பினும், திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே... இந்த உலகின்கண் உறைக்குள் வைத்திருந்த வேலினை என் சித்தத்தில் அழுத்திப் பாய்ச்சி விட்டாயே. இவ்வாறு நீ செய்ததற்கு, நான் என்ன பிழைதான் செய்தேனோ...'' என்று அரற்றிக் கேட்கிறார் வாசகர்.

இங்கே உறையுள் இருந்த வேல் என்பது ஞானத்தைக் காட்டும். பெருந்துறையில் உறையும் பெருமான், ஞானத்தைத் தந்து பின் மறைந்ததை எண்ணி வாசகர் பெருமான் வருந்துகிறார், செய்த பிழை அறியேன் என்று ஏங்குகிறார். "மார்பில் வேலைப் பாய்ச்சுவதற்கு யான் செய்த பிழைதான் யாது?' என்று கேட்பது நயமான ஒன்று. யான் யாதொரு தவமும் செய்யாதிருக்கவும், இறைவன்தான் குருவாகி வந்து எனக்கு ஞானத்தை அருளினான் என்று அவனது பெருங்கருணைத் திறத்தைப் புகழ்கிறார் வாசகர். இதனால், இறைவனே குருவாகத் தோன்றி தன்னை ஆட்கொள்வான் என்பது அவரால் கூறப்பட்டது.


No comments:

Post a Comment