பலன்தரும் பரிகாரத் தலம் !!!
செல்வ வளம் செழிக்கச் செய்யும் ஸ்ரீநரசிம்மர்!
உக்கிர ரூபமாகக் காட்சி தந்த நரசிம்மரைக் காட்டிலும், தாயாருடன் கூடிய சாந்த நரசிம்மரின் தரிசனம் கிட்ட வேண்டும் என்று விருப்பம் கொண்டனர் அத்ரி மகரிஷியும் அனுசூயா தேவியும். அதற்காக நைமிசாரண்யம் என்ற காட்டில் கடும் தவத்தில் ஈடுபட்டனர். ஆயினும் நரசிம்மர் ஸ்வாமி எழுந்தருளக் காணவில்லை. இருப்பினும் மனம் தளராமல் தங்கள் தவத்தை இன்னும
் கடுமையாக்கினர். அவர்களின் கடும் தவத்தால் மனமகிழ்ந்த ஸ்ரீநரசிம்மர், தென் திசைக்குச் செல்லுமாறும், அங்கே பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் பத்மகிரியில் கிழக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்யுமாறும் அப்போது தாம் தரிசனமளிப்பதாகவும் அசரீரி வாக்காகக் கூறி அருளினார்.
அத்ரி மகரிஷியும் அனுசூயா தேவியும் அவ்வாக்கின்படி, பாலாற்றங்கரையில் பத்ம கிரியில் தியானத்தில் அமர்ந்தனர். நெடுநாட்கள் சென்றன. அவர்கள் விருப்பத்தினை நிறைவேற்றிய ஸ்ரீநரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மராக தரிசனம் தந்து இங்கே கோயில் கொண்டார்.
பிரமாண்ட புராணம் 17வது அத்யாயத்தில் இவ்வாறு தல புராணக் கதை கூறப்படுகிறதாம்.
விஷ்ணுசித்தராக, தம் சித்தத்தில் ஸ்ரீவிஷ்ணுவை சதா சர்வ காலமும் வைத்தபடி தியானிக்கும் முனிவர் ஒருவர். அவருக்கு, ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சை ரூபமாக வழிபட்டால், அதற்கான முழுமையான பலனும் எந்தத் தலத்தில் கிட்டும் என்று ஓர் ஐயம். தம் சந்தேகம் போக்க மரீச முனிவரை அணுகினார் அவர். அவருக்கு வழிகாட்டிய மரீச முனிவர், பாலாற்றங்கரையில் குன்றின் மேல் திகழும் இந்தத் தலத்தைக் கைக்காட்டினார். அவர் வழிகாட்டியபடி, இங்கே ஸ்ரீநரசிம்மப் பெருமாளின் அர்ச்சாவதாரக் கோலத்தை அமைத்து, தினமும் தொழுது முழு பலனையும் பெற்றார் விஷ்ணுசித்த முனிவர்.
இத்தகைய புராணப் பெருமைகளைத் தாங்கி நிற்கிறது பழையசீவரம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் திருக் கோயில். செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது பழையசீவரம் கிராமம். இந்தக் கிராமத்தின் புராண காலப் பெயர் ஸ்ரீபுரமாம். மகாலக்ஷ்மியின் அருள் கடாட்சம் நிலவும் தலமாக இது போற்றப்பட்டுள்ளது. பின்னாளில் ஸ்ரீபுரம் சீவரமாகி இந்த ஊர் பழைய சீவரமாகிவிட்டது என்கிறார்கள்.
சாலையில் செல்லும்போது, இடது புறம் பாலாறு. வலது புறத்தில் சற்று மேடான ஒரு சிறிய குன்றின் மீது ஸ்ரீநரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் குன்றுக்கு பத்மகிரி என்பது புராணப் பெயர். ஆலயத்துள் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் சுமார் 6 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகில் ஸ்ரீமஹாலக்ஷ்மியை தம் மடியில் இருத்தியபடி, அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
அஹோபிலம் என்ற தலத்தில், ஸ்ரீநரசிம்மர் காட்சி தருவதுபோல், இங்கே பெருமான் திகழ்கிறார். எனவே இங்கே தனி சந்நிதியில் அஹோபிலவல்லி தாயார் எழுந்தருளியுள்ளார்.
இந்தக் கோயிலில் இருந்து சற்று மேலே சுமார் 150 படிகள் ஏறிச் சென்றால் ஒரு மண்டபத்தைக் காணலாம். இந்த மண்டபத்துக்குச் சற்று அருகே, மிகவும் பாழடைந்த நிலையில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இது யாரும் செல்ல இயலாத அளவு சிதிலமடைந்து காணப்படுகிறது.
ஸ்ரீநரசிம்மப் பெருமாளின் கோயில் திகழும் இந்த பத்மகிரிக் குன்று, மூலிகைகள் நிறைந்த குன்று என்கிறார்கள். இந்தப் பழையசீவரம் தலத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. காஞ்சிப் பேரருளாளன் காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள், துவக்க காலத்தில் அத்தி மரத்தால் ஆன மூலவராக அருள்பாலித்து வந்தாராம். பிற்காலத்தில், அன்னியர் படையெடுப்புகளின் காரணமாக அத்தி வரதர் விக்ரஹத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வேறு விக்ரஹத்தை நிறுவ எண்ணிய பெரியோர்கள் இந்த பத்மகிரியில் இருந்துதான் ஸ்ரீவரதராஜருக்கு விக்ரஹம் செய்து, காஞ்சிக்கு எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்தனராம். எனவே, பழைய சீவரத்தில் இருந்து தாம் விக்ரஹமாக வந்த வரலாற்றை நினைவுகூரும் வகையில், காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆண்டுக்கு ஒரு முறை மாட்டுப் பொங்கல் தினத்தில் பரிவேட்டைக்கு இந்த ஊருக்கு வந்து தங்குகிறார்.
இந்தத் தலத்துக்கு ஒரு முறை வந்து பெருமாளை தரிசித்தாலே சகல விதமான பயமும் தொலையும்.. ஸ்வாமி தாயாருடன் கூடிய நிலையில் காட்சி தருகிறார் என்பதால், திருமணத் தடை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையையும் நல்ல புத்திரப் பேற்றையும் அருள்கிறார். அதற்கு பானக நைவேத்தியம் சிறப்பு.
அமைவிடம்: செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலாற்றங்கரையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment