Sunday, September 2, 2012

பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி  By.Savithri Vasan

நான் சொல்லும் குறிப்பு 12 உருண்டைகள் வரும்
5 பேர் சாப்பிடக்கூடிய குழம்பு அளவு.


ஆழாக்கு துவரம் பருப்பு ஊறவைக்கவும்
புளி எலுமிச்சை அளவு ஊறவைத்து
கரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும் .

அரைக்க தேவையானவை

பத்து நீட்டு மிளகாய்
நான்கு பச்சை மிளகாய்
கொஞ்சம் பெருங்காயம்
கொஞ்சம் உப்பு

இதை முதலில் மிசியில் நன்றாக
அரைத்துக்கொள்ளவும் , பிறகு இதனுடன்
ஊறவைத்த பருப்பை மிக்சியில் போட்டு
அரைத்த மிளகாயுடன் ஓன்று இரண்டாக
அரைத்துக்கொள்ளவும்.

கரைத்த புளி கரைசலில் , மூன்று ஸ்பூன்
குழம்புபொடி, கொஞ்சம் பெருங்காயம்
தேவையான உப்பு போட்டு அடுப்பில்
மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
புளி கரைசலுடன் தேவையான அளவு
தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும் .

அடுப்பில் வாணலியில் கொஞ்சம் எண்ணை
விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதை
சிறிதுநேரம் கிளறி இறக்கவும் .

கொஞ்சம் அரிசிமாவு கைகளில் தொட்டுக்கொண்டு
கிளறி எடுத்த விழுதை உருண்டைகளாக
உருட்டி வைத்துக்கொள்ளவும் . பிறகு
அடுப்பில் கொதிக்கும் குழம்பில் ஒன்றன்பின்
ஒன்றாக போடவும்.

குழம்ப நல்லா கொதிக்க விடுங்க , உருண்டை
நல்லா வேகட்டும் அப்பத்தான் சாப்பிட சுவைக்கும்

கொஞ்சம் தேங்கா எண்ணை விட்டு , கடுகு
உளுத்தம்பருப்பு தாளித்து , கருவேப்பிலை சேர்த்து
இறக்கவும்.

ரசம் :-

பருப்பு ஊறவைத்த தண்ணி, மிக்சி அலம்பி எடுத்த
தண்ணி இத ஒரு பாத்திரத்தில் போட்டு , கொஞ்சம்
குழம்புபொடி, பெருங்காயம், உப்பு , தக்காளி சேர்த்து
கொதிக்க விடுங்க , நல்லா கொதிச்சு வந்ததும்
தண்ணி விட்டு விளாவி, நெய்ல கடுகு, மிளகாவத்தல்
தாளித்து , மேல கொஞ்சம் கொத்தமல்லி தூவி
இறக்கிடுங்க

தட்டப் போடுங்க , ரெண்டு உருண்டை போட்டுக்கோங்க
சூடா சாதம் , கொஞ்சம் நெய் , அப்டி அந்த உருண்டைய
கைவச்ச்சதும் அது அப்டியே உடையும் , அத அப்டியே
சாதத்தோட பிசைஞ்சு சாப்டுங்க. பக்கத்தல தண்ணி
இருக்கா, முதல் பிடி வாய்க்குள்ள போனதும் விக்கல்
..........வந்துடுச்சா ........, தண்ணி குடிங்க , இப்டியே
ஒவ்வொரு சாதமா சாப்டுங்க , சந்தோஷமா இருங்க
நானும் போய் சாப்டுட்டு வரேன் ,


இந்த ரசம் இருக்கு பாருங்க அது நான் சொல்லறத விட
நீங்க வந்து சாப்டு பார்த்து சொல்லணும்ங்க அதுதான்
எனக்கு திருப்தி , எப்ப வரீங்க

1 comment:

  1. செய்து பார்க்கிறேன். சுவையாக இருக்கிறது - படிக்கறதுக்கே.

    ReplyDelete