Saturday, November 2, 2013

இறைவனுக்கு மட்டுமே உரிய மலர்மனிதர்கள் சூடாத .. இறைவனுக்கு மட்டுமே உரிய மலர் எது தெரியுமா?


மலர்களை விரும்புபவர்களால் கடவுளை வெறுக்க இயலாது. மலர்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள் இறைவனுடனும் நெருங்கியிருக்கிறார்கள் என்று பொருள். எல்லா மலர்களுமே இறைவனுக்கு நெருக்கமானவைதான். என்றாலும் கூட, சில மலர்கள் இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கத் தக்கவை என்ற உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றுவிடுகின்றன. இவற்றை மனிதர்கள் சூடுவதில்லை. அத்தகைய மலர்தான் சங்கு புஷ்பம்!
இறைவனுக்கு மட்டுமே உரித்தான சங்கு புஷ்பத்தை சர்வ சாதாரணமாக எங்கும் காணமுடியும். இறைவன் எங்கும் நிறைந்திருப்பது போல் சங்கு புஷ்பமும் எங்கும் வளர்ந்து, எளிமையாகக் கிடைக்கக் கூடியதாகவே இருக்கிறது. வெண் சங்கு புஷபமும், நீல நிற சங்கு புஷ்பமும் இனி எங்கு கண்களில் தென்பட்டாலும், சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்து நினைத்துக்கொள்ளுங்கள். வெண் சங்கு புஷபம் சிவனுக்குரியதாகவும், நீலநிற சங்கு புஷ்பம் விஷ்ணுனுக்குரியதாகவும் கருதப்படாலும்கூட, நிறம் மாற்றி அர்ச்சித்தாலும் சிவனும் விஷ்ணுவும் கோபம் கொள்ள மாட்டார்கள்.
சங்கு புஷ்பங்கள் பெண் தெய்வங்களுக்குரியதில்லையா என்ற சஞ்சலமே தோன்ற வேண்டாம். அம்பாளுக்கும் உரிய அற்புத மலர்தான் சங்கு புஷ்பம். பொதுவாகவே, பௌர்ணமியன்று அம்பாள் ஆராதனை மகா விசேஷம்.
சனிக்கிழமையன்று வரும் பௌர்ணமி தினத்தன்று நீலநிறப் புடவை அல்லது நீலநிற வஸ்திரம் சாத்தி, நீல சங்கு புஷபத்தால் அன்னையை அலங்கரித்து அல்லது அர்ச்சனை செய்து, எள்ளு சாதம், தேன் கலந்த பால் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து பக்தர்களுக்கு விநியோகித்து வந்தால், தீராத நோய்களும் தீரும். தீராத, நீண்ட காலங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற மனக் கஷ்டமும் தீரும் என்கிறது ஒரு பூஜை சம்பிரதாயம்.
திருமியச்சூர் ஸ்ரீலலிதாம்பிகையின் அழகு கண்டு ரசிக்காத பக்தர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அழகோவியமாக அவள் வீற்றிருக்கும் ஆலயத்தில் சதய நட்சத்திரத்தன்று, தாமரை இலைகளில் சங்கு புஷபத்தை வைத்து, அங்கேயே எழுந்தருளியுள்ள ஈசன் மேகநாத சுவாமியைப் பூஜித்து மனம் உருகப் பிரார்த்தனை செய்து கொண்டு, அதே இலையில் வெண் அன்னத்தை நிவேதனம் செய்து அன்னதானம் செய்து வந்தாலும், நாமும் பிரசாதமாக உட்கொண்டாலும் கடும் பிணிகள் காணாமல் போய்விடும் அற்புதத்தை அனுபவிக்கலாமாம்.
கோயமுத்தூரில், கொட்டிமேடு எனும் இடத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட 31வது சிவ ஸ்தலமாம். ஈசனைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அசுரர்களின் தொல்லைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் இறங்கிவந்து தரிசித்த ஸ்தலம் இது. அவர்கள் வந்தபோது, ஸ்ரீசங்கமேஸ்வரர் சங்கு புஷ்பக் கொடிகளுக்கிடையே லிங்க வடிவமாய் எழுந்தருளிக் காட்சியளித்தார். எனவே, ஸ்ரீசங்கமேஸ்வரர் என்று பெயர் பெற்றுள்ள லிங்க வடிவத்தின் உச்சியில் ப்ரும்ம சூத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இத்திருத்தலத்திலுள்ள ஈசனுக்கு சங்கு புஷ்பங்களைச் சாத்தி வழிபட்டு வேண்டிக் கொள்ள- குடும்பப் பகை, வியபாரப் பகை என அனைத்துப் பகைகளும் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.
சங்கு புஷ்பம் சிவனுக்குரிய காலை, மதியம், மாலைப் பூக்களில், மதியம் இடம்பெறுகின்ற பூக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் சிவனுக்குரிய குறிப்பிட்ட மலர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஐப்பசி மாத பௌர்ணமியன்று வில்வம், கொன்றை, மகிழம், மல்லிகை ஆகியவற்றுடன் வெண் சங்கு மலர்களும் இடம்பெற்றுள்ளன.
விஷ்ணுவின் நிறத்தையே தனதாக்கிக் கொண்டுள்ள சங்கு புஷ்பம் விஷ்ணுவுக்கு ஆகாத மலராகிவிடுமா? அதுவும் பூவின் வடிவமே சங்கு வடிவத்தில் இருக்கும்போது! சங்கு சக்கர கதா பாணியான ஸ்ரீமகாவிஷ்ணுவின் நேசத்திற்குரிய மலர்தான் நீலநிற சங்கு புஷ்பம். இந்தப் பூவுக்கு தனது நிறத்தினாலும் தனது வடிவத்தினாலும், தானே விஷ்ணுவின் அவதாரம் என்ற கர்வத்துடன், தன் கொடி மீது ஏறும் சிற்றெறும்புக் கூட்டத்திடையே கர்வமும், கோபமும் கொண்டதாகவும், இறைவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவைதான் என்று சிற்றெறும்பு சங்கு புஷ்பத்திற்குப் புரிய வைத்ததாகவும் ஆன ஒரு கற்பனைக் கதையை நான் படித்திருக்கிறேன்.
சங்கு புஷ்பம் அத்தகைய கர்வம் கொள்ளத்தகுந்ததுதான் என்பதை இலக்கியங்களில் இந்த மலர் பெற்றிருக்கும் முக்கியத்துவத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
குறிஞ்சிப்பாட்டு, சீவக சிந்தாமணி மற்றும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சிதம்பர நாத மாமுனிவர் இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்கு புஷ்பம் பல பெயர்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்த மலரை சங்க இலக்கியம் கருவிளை என்கிறது. குறிஞ்சிப்பாட்டு வெண்ணிற சங்குப் பூக்களை செருவளை என்றும், ஊதா (நீலம்) நிறப்பூக்களை கருவிளை என்றும் குறிப்பிடுகிறது. மகாபாரதம் அபராஜிதா என்றழைக்கிறது. ஆண்டாளோ, கண்ணுக்குகந்த இந்த மலரை கார்க்கோடகப்பூ என்று அழைத்து தன் பாட்டினில் வைத்தாள்.
சமஸ்கிருதமும், சித்த மருத்துவமும் சங்கு புஷ்பத்திற்கு விதவிதமான பெயர்கள் சூட்டி, போற்றிப் பாடுகின்றன. கர்க்கணம், மாமூலி, காக்கட்டான் என்று சித்த மருத்துவம் கொண்டாடும் இந்தமலரை, ஹிந்தி. பெங்காலி ஆகியவை அபராஜிதா என்றும், கிரிகணிக்கி கிர்குணா என்று கன்னடமும் ஷேங்கபுஷ்ப என்று மராத்தியும் கொங்கணியும், கோகர்ணிகா, அர்த்ரகர்ணி என்று சமஸ்கிருதமும் அழைக்கின்றன.
சித்தர்களுக்கும் மலர்களுக்கும்கூட சில அபூர்வத் தொடர்புகளை அறிய முடிகிறது. சங்கு புஷ்பத்தைப் பொறுத்தவரை சித்தர்களில் தலைசிறந்தவர் என்று போற்றப்படுகின்ற சிவவாக்கிய சித்தரை வெண் சங்கு மலர் கொண்டு பூஜித்தால் சிறந்த பலனைத் தரும் என்று கருதப்படுகிறது.
புலன்களில்-கிருஷ்ணனின் ஒளி என்றும், ராதையின் உணர்வு என்றும் சங்கு புஷ்பங்கள் பற்றிய அற்புதமான ஒரு விளக்கத்தைத் தருகிறார் அரவிந்த அன்னை. நீலமேக ஸ்யாமளனனுக்கும் அவளின் நேசத்திற்குரிய ராதைக்கும் இடையேயான ஆத்மார்த்தமான உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய தன்மை இந்த மலருக்கு உண்டு என்று அறியும் போது மனம் சிலிர்த்துப் போகிறது. இந்த மலரை ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சமர்ப்பிக்கும்போது ராதையின் மன உணர்வுகளை மௌனமாக ராதைக்கு உணர்த்திவிடக் கூடிய வல்லமை பொருந்தியதான இந்த மலரை நாம் ஏன் ராதாகிருஷ்ண புஷ்பம் என்று அழைக்கக் கூடாது? இனி... நீலநிற சங்கு புஷ்பங்களைப் பார்க்க நேரும்போது ராதா கிருஷ்ணனையும் நினைத்துப் பாருங்கள். உள்ளத்தில் உவகை பொங்கும். ஆகாயம், கடல் இரண்டுமே நீலவண்ணஸ்யாமளனை நினைவுபடுத்துவதுபோல் நீலவண்ண சங்கு புஷ்பமும் அந்த ராதா கிருஷ்ணனையேதான் நினைவுபடுத்தக் கூடியதாக உள்ளது.
சுபிஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதா என்றெல்லாம் கூட பற்பல பெயர் கொண்டுள்ள சங்கு புஷ்பங்களை, சாதாரண மனிதர்களாகிய நாம் சரியாகப் புரிந்துகொள்வதற்கு முயலவில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்ன நிறம் என்று தெரியாமல் சின்னத் தொட்டியில் வளர்த்த சங்குச் செடியில் முதல் பூ... ஒரே ஒரு பூ, வைகுண்ட ஏகாதசியன்று நீலநிறத்தில் பூத்தபோது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. மகாவிஷ்ணுவே என் வீட்டில் அவதரித்து விட்டதைப் போல் ஆனந்தமடைந்தேன். பூக்கள் நம் உணர்வுகளை மௌனமாக எடுத்துச்சென்று இறைவனின் பாதமலர்களில் சேர்த்துவிடும் அற்புதத்தை மலர்களால் இறைவனை அர்ச்சித்து அனுபவித்தவர்களுக்கே புரியும்!
இறைவனுக்குத்தான் நம்மீது எத்தனை கருணை! அத்தனை மலர்களுக்குள்ளும் மகத்தான மருத்துவ சக்திகளையும் புதைத்து வைத்துள்ளான். சங்கு புஷ்பமும் அபாரமான மருத்துவ மகிமைகளைக் கொண்டது. இதனை சித்த மருத்துவத்தில் சிறப்பாக விளக்கியிருக்கிறார்கள். ரத்தக்குழாய் அடைப்புதான் மனிதனுக்குப் பெரும் பிரச்னை. இதற்கு முறைப்படி சங்கு புஷ்பங்களை தூய நீரில் ஊறவைத்துக் குடித்து வர, நல்ல பலன் தெரியுமாம்! நெறிக் கட்டிகளிலிருந்து விடுதலை பெற சங்கு புஷ்பத்தின் இலை, பூவுடன் உப்பு சேர்த்து நெறிகட்டிய இடத்தில் அரைத்துப் போட்டு வரலாமாம். கட்டிகள் மிகவும் வீக்கமாக இருந்தால் சங்குப்பூ இலைச்சாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து பருகி வர நிவாரணம் கிடைக்கும். யானைக்கால் வியாதிக்கும் இதன் விதைகள், வேர்கள் கண்கண்ட மருந்தாகவே உள்ளன.