Friday, November 29, 2013

51 சக்தி பீடம்: ஸ்ரீசைலம் பிரமராம்பிகை

51 சக்தி பீடம்: ஸ்ரீசைலம் பிரமராம்பிகை








ஆந்திராவில், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரமராம்பிகை ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் கழுத்தின் கீழ்ப்பகுதி விழுந்த இடமாகக் கருதப்படும் இது, 51 சக்தி பீடங்களில் 15வது பீடமாகத் திகழ்கின்றது.


இந்த பீடத்தின் நாயகி மகாலக்ஷ்மி (பிரமராம்பிகை). பைரவர் சம்பரானந்தர் (மல்லிகார்ஜுனர்) என்று அழைக்கப்படுகிறார். அர்ஜுனா எனப்படும் மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்ட புனிதத் தலங்களில் ஒன்றாக கர்னூல் மாவட்டத்தின் தலைமருதூர் ஸ்ரீசைலம் விளங்குகிறது. சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடமாதலால் ஸ்ரீசைலம் எனப்பட்டது.


இங்கே நடைபெற்ற புராணக் கதைகளில் ஒன்று... பரமேஸ்வரன் ஒரு முறை அர்த்தநாரீஸ்வரராக, மகரிஷி பிருங்கிக்குக் காட்சி அளித்தார். அப்போது பார்வதியைத் தவிர்த்துவிட்டு சிவனை மட்டும் வலம் வர அவர் விரும்பினாராம். எனவே, வண்டு உருவத்துக்கு மாறி அவர்களுக்கு இடையே ஒரு துளை போட்டு ஈசனை மட்டும் பிரதட்சிணம் செய்தாராம். இதனால் சினம் கொண்ட பார்வதி, அந்த வண்டின் சக்தி முழுவதையும் கிரகித்துக் கொண்டதால் முனிவர் செயலிழந்து தவித்தார். ஆனால், அவரது ஆழ்ந்த தூய ஈஸ்வர பக்தியை ஈசனிடமிருந்து கேட்ட தேவி, பிருங்கிக்குப் புத்துயிர் அளித்தார். வண்டு உருவில் இருந்த மகரிஷியை ஆட்கொண்டதால், அன்னை பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள். "பிரமர' என்றால் வண்டு எனப் பொருள். மேலும், அன்னையும் அவளது பரிவார தேவதைகளும் ஒரு முறை கருவண்டுகளாக மாறி, அருணா என்ற அசுரனின் உடல் முழுவதையும் கொட்டி சம்ஹரித்ததால் இந்தப் பெயர் பெற்றாள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.


அன்னையின் கருவறை பின்புறச் சுவரில் தென்படும் துவாரத்தில் காதை வைத்துக் கவனித்தால், வண்டின் ரீங்காரத்தை இப்போதும் கேட்கலாம். தேவியின் பீஜாட்சரமான ஹ்ரீம் இந்த பீடத்தில் விசேஷமாக இடம்
பெற்றுள்ளது.

அன்னையின் சந்நிதியில் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தை நாம் தரிசிக்கலாம். அதிலிருந்து வரும் அதிர்வலைகளை உணரும் போதே, நாம் செய்த பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கே கோயில் கொண்டுள்ள தேவி பிரமராம்பிகையை காளி, பார்வதி, சந்திரவதி, மஹாலட்சுமி எனப் பலவாறு போற்றுகிறார்கள் பக்தர்கள்.

No comments:

Post a Comment