Thursday, October 31, 2013

விதவிதமான தீபாவளி


விதவிதமான தீபாவளி

தீபாவளி ஓர் அகில இந்தியக் கொண்டாட்டம். என்றாலும் வெளிநாடுகள் பலவற்றிலும் கூட அது கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் தீபாவளி வெகு சிறப்பான ஆரவாரத்தோடு கொண்டாடப்படுகிறது. அங்கு இந்தப் பண்டிகை ஐந்து நாட்கள் நீடிக்கிறது. ஆனால், கொண்டாடப்படும் விதத்தில்தான் வேறுபாடுகள்.


அங்கு முதல்நாள் காகங்களும், இரண்டாம் நாள் நாய்களும் சிறப்பாகப் பூஜிக்கப்படுகின்றன. யமனுடைய கோபத்திலிருந்து தப்புவதற்காக இப்படிச் செய்கின்றனர். நம் நாட்டில் உள்ளதைப் போன்றே மூன்றாம் நாள் முக்கியப் பண்டிகை தினம். அன்றைய தினம் அதிகாலையில் "கோ' பூஜையும், மாலையில் சந்தியா காலத்தில் "ஸ்ரீலட்சுமி பூஜை'யும் செய்யப்படுகின்றன.

நம் நாட்டைப் போன்றே மத்தாப்புக் கொளுத்திப் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. நான்காவது தினம் "கோவர்த்தன பூஜை' நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீகிருஷ்ணனுக்கு 54 வகை தின்பண்டங்கள் கொண்ட "ச்சப்பன் போக்' என்ற போஜனம் படைக்கப்படுகிறது. விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஐந்தாம் நாள் அங்கும் நம் நாட்டைப் போலவே, "பையா தூஜ்' என்னும் சகோதர சகோதரிகள் நலன் நாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சகோதரி வீட்டில் சகோதரர்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.


ஸ்ரீலங்காவில் தீபாவளியன்று பலவகை உணவுகளோடு விருந்து. இரவு வீடுகளில் தீபாலங்காரமும், வாணவேடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.மொரீஷியசில் நெய்தீபம் ஏற்றுவார்கள். குறிப்பாக புதிய தம்பதி மற்றும் திருமணத்துக்கு காத்திருப்போரால் ஏற்றப்படும். லக்ஷ்மி பூஜையோடு ஸ்ரீராமன் பூஜையும் சிறப்புப் பெறும்.

பிஜித்தீவில் ஏறத்தாழ இந்திய பாணிக் கொண்டாட்டங்கள். குறிப்பாக ராம் லீலா நிகழ்ச்சி நடைபெறும்.

சீனாவில் தீபாவளி "நயி மஹீவா' என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டைப் போன்றே வீடுகளில் அலங்காரம் செய்கிறார்கள். வாயிலின் இருபுறமும் சீன மொழியில் சுபம், லாபம் என்றெழுதி மனித உருவங்களை வரைந்து வைப்பர். அந்த உருவங்களை "மேன்-ஷைன்' என்கிறார்கள். அவை வெற்றியின் அடையாளங்கள். அன்று கலாசாரப் போட்டிகள் நடத்தப்படும். தலைநகர் "பீஜிங்'கில் 100 அடி உயர சக்கரம் அமைத்து தீபங்களை ஏற்றி வைத்து அலங்கரிப்பார்கள்.


தாய்லாந்தில் தீபாவளி "கிரான்சோங்' எனப்படுகிறது. அன்றைய தினம் வாழைக் கிண்ணங்கள் (அதாவது நமது தொன்னை போன்றது) செய்து அதனுள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து நதியில் மிதக்க விடுவார்கள்.

ஜப்பானில் மூன்று நாள் கொண்டாட்டம். மூன்றாம் நாளை "சுக-சம்ருத்தி' என்று அழைக்கிறார்கள். அதாவது சுகமும் நிறைவும் தரும் பண்டிகை என்று பொருள். அந்த மூன்று நாளும் வீட்டை விளக்குமாறு எடுத்துக் குப்பை கூட்டுவதில்லை. மாறாக நீர் தெளித்துக் கையால் துணிகொண்டு துடைப்பர்.

மலேஷியாவில் தீபாவளி ஒரு அரசு விழா. அன்று பொது விடுமுறை. தீபாலங்காரம் மற்றும் வாண வேடிக்கை உண்டு. பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். இலங்கை வெற்றிக்குப் பிறகு ஸ்ரீராமன் ஊர் திரும்பிய நிகழ்ச்சிதான் அங்கு தீபாவளி. ஸ்ரீலட்சுமி தேவி வெளிப்பட்ட நிகழ்ச்சியை அவர்கள் தீபாவளியுடன் சம்பந்தப்படுத்துவதில்லை. அந்நாட்டுக்கென "ஹிகாயத் சிறீராம்' என்ற தனி ராமாயணம் உண்டு.

மேற்குறிப்பிட்ட நாடுகள் தவிர மியான்மர், லாவோஸ், வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரிலும் நமது தீபாவளிப் பண்டிகை "ராம்லீலா' நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெறுவதோடு அங்கும் தீபோற்ஸவ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்திய நாட்டுக்குள் பிற பகுதிகளில் என்று பார்க்கும்போது, ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் தீபாவளி தினத்தன்று மின்னல் ஒளி, ஸ்ரீலட்சுமியின் உருவமாகக் கருதப்பட்டு மரியாதை காட்டப்படுகிறது. பல வகை உணவுகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அன்று வீட்டில் ஏற்படும் இடையூறுகள் சுபமாகவே கருதப்படும். மகாராஷ்டிராவில் வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. இரவு முழுவதும் ஆடல், பாடல்கள்தான். குஜராத்தில் அன்று உப்பு வாங்குவதும் சுப சகுணம். இரவு தீபம் ஏந்திய குழந்தைகளின் ஊர்வலம் நடக்கும். வழியில் பெண்கள் அவர்களுக்குத் தின்பண்டங்கள் வழங்குவர். பணம், காசு கொடுப்பதும் உண்டு. ஹைதராபாத்தில் அன்று காளை சண்டை நடத்தப்படும்.

அமிர்தசரஸில் அன்று பொற்கோயிலில் சிறப்பு நிகழ்ச்சி. அந்த தினம், சீக்கியர்களின் 4வது குரு ராமதாசர் பொற்கோயில் கட்ட அடிக்கல் நாட்டிய தினம் என்பதால் அக்கோயில் வண்ணச் சர விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.

பீஹார் மாநிலத்தவர்கள் அன்று மட்டைத் தேங்காயைப் பறித்து, உறித்து உடைத்து, தேங்காய் பருப்பை அப்படியே தின்பது சுபமாகக் கருதப்படுகிறது. பழங்குடியின ஆண்கள் தலையில் தானிய பசும்

முளைகள் நிரப்பப்பட்ட மண் பாண்டத்தை (முளைப்பாரி) சுமந்து கொண்டு கையில் விளக்குடன் ஊர் முழுவதும் சுற்றி வருவார்கள். கர்நாடகத்தில் எண்ணெய் முழுக்குப் பழக்கம் உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அன்று பசுக்கள் வழிபடப்படுகின்றன. வங்காளத்தில் அன்று காளி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.

இவ்வாறு அகில உலகமெங்கும் விதவிதமாகக் கொண்டாடப்படும் தீபாவளி அளவற்ற மகிழ்ச்சியை அள்ளித் தரும் திருநாளன்றோ!