Friday, May 24, 2013

ஸஹசர போஜனமும் - லக்ஷதீபமும்



ஸஹசர போஜனமும் - லக்ஷதீபமும் 



ஏழை பாட்டி , மகா பெரியவாளிடம் அபார பக்தி ,
கை காசை கொண்டு மிகவும் சிக்கனமான வாழ்க்கை
மடி ஆசாரம் ரொம்ப உண்டு .

தினமும் பெரியவா இருக்கும் இடத்தை சுத்தம் செய்து
கோலம் போட்டு தீபம் ஏற்றி வைப்பது வழக்கம் . இரண்டு
மாற்று உடைகள் தான் பாட்டியின் சொத்து.

ஒரு பக்தர் அரிசிக் குருனையும், வெல்லமும் பெரியவாளிடம்
சமர்ப்பித்தார், அவற்றை நல்லபடியாக விநியோகம் செய்ய
வேண்டுமே?

பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்!!

" காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுக்களிலேயும்
கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா, அரை ஆழாக்கு
வீதம் போடு....." என்றார்கள்

பாட்டியும் அவ்விதமே அலைந்து திரிந்து, பல எறும்புப்
புற்றுகளில் அரிசிக் குருணை , வெல்லம் போட்டு விட்டு
வந்தாள்.

அந்த வேலை முடிந்ததும் பெரியவா பாட்டியை
அழைத்தார் .....

பெரிய மாலை போல் திரிநூல் இருந்தது , ஒரு டின்
நிறைய எண்ணை இருந்தது .....

திரிநூலை கட் பண்ணி , ஒவ்வொரு கோயிலாக போய்
எவ்வளவு விளக்கு போடா முடியுமோ, அவ்வளவுக்கு
போடு என்றார். ஒருநாளைக்கு 2 - 3 கோயிலுக்கு போனால்
போதும் என்றார்கள் பெரியவா

பாட்டிக்கு பரம சந்தோசம் , பெரியவா சொன்னாமாதிரி
பக்தி சிரத்தையுடன் நாள் தோறும் பல கோவில்களுக்கு
சென்று முடிந்த அளவு விளக்கு போட்டு பெரியவா
உத்தரவை நிறைவேற்றினாள். அந்த செய்தியையும்
பெரியவாளிடம் பாட்டி தெரிவித்தாள்.

இந்த பணிகள் எல்லாம் முடிந்த சிலநாளில், ஒரு பெரிய
மனிதர் ஆடம்பரமாக, மடத்துக்கு வந்தார், பெரிய மனுஷர்
தோரணை , அகங்கார நடையுடன்.

" ஸஹஸ்ரபோஜனம் செய்துவிட்டு வந்திருக்கேன்,
லக்ஷதீபம் போட்டிருக்கேன் ....." என்று தற்பெருமை
தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவாளுக்கு வருடைய அகம்பாவம் புலப்பட்டது.
தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதை பற்றி பேசிக்கொள்வது
புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு நற்பலன்கள்
கிடைக்காமல் போய்விடும்.

வினயத்தோடு சொல்லியிருந்தால் மகான் சந்தோஷப்பட்டு
இருப்பார். ஆனால் அந்த மனிதர் அகம்பாவத்தோடு பேசினார்.

பெரியவா சொன்னார்கள்:

இங்கே ஒருபாட்டி இருக்கா லக்ஷபோஜனம் செஞ்சிருக்கா
பல லக்ஷம் தீபம் போட்டிருக்கா !!!

அந்த பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது. " யார் அந்தப்
பாட்டி.... அவ்வளவு பெரிய பணக்காரி?என்று
தெரிந்துகொள்ள ஆவல் பிறந்தது.

பெரியவா அந்த பாட்டியை அழைத்து வரசொன்னார்கள் !!

"இவள்தான் அந்த பாட்டி , அவ்வளவு உத்தமமான காரியத்தை
செய்தவள்....."

அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து
நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர் அயர்ந்து போனார்
பாட்டியின் நெற்றியில் மிளிர்ந்த வெள்ளை வெளேரென்ற
திருநீற்றுப் பூச்சு , அவளுடைய இதய சுத்தத்தை
விளக்கினாற்போலிருந்தது.

பெரியவா சொன்னார்கள்:

"ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார். பிரும்மா
முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் இருக்கிறார் ,
மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.

"நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கே , ஆனால்
இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு (எறும்புகளுக்கு)
ஆகாரம் போட்டிருக்கா; எதோ ஒரு கோவிலில் லக்ஷ
தீபம் போட, நீ திரவியம் கொடுத்திருக்கே. லக்ஷம்
தீபத்துக்கு , எண்ணை , திரி போட்டு உனால் ஏற்றவே
முடிந்திருக்காது. ஆனால் இந்த பாட்டியோ பல
கோயில்களுக்கு போய் இருக்கிறாள், பக்தி சிரத்தையாய்
அகல் வாங்கி , தானே திரிபோட்டு எண்ணை இட்டு
தன் கையாலேயே தீபம் போட்டிருக்கிறாள்..."

கேட்டுக்கொண்டிருந்த பிரமுகர் தலை குனிந்தார்.

பெரியவரிடம் பவ்யமாகவும், அகங்காரம் இல்லாமலும்
பேசவேண்டும் என்பதை புரிந்து கொண்டு, பின்னால்
பலரும் நிற்பது கண்டு வழிவிட்டு நகர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து பெரியவா , அந்த மனிதரை அழைத்து
அமரச்செய்து பல சமாசாரங்கள் பேசி பிரசாதம் கொடுத்து
அனுப்பி வைத்தார் .

அடக்கம் கற்றுக்கொண்ட அவர் ஆனந்தமாக சென்றார்.

தகவல் : மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள் - பகுதி - 3

1 comment:

  1. EGO IS GONE !!! SIMPLICITY HAS COME !!

    KEEP IT UP !! BRAVO !! WELL DONE !!

    ReplyDelete