Sunday, May 12, 2013

அறிவோம் அட்சய த்ரிதியை நாளின் பெருமைகளை

அறிவோம் அட்சய த்ரிதியை நாளின் பெருமைகளை 




பொன் சேர்ப்பதே பெருமை அல்ல புகழ் சேர்ப்பதும் 

பெருமைதான்





அட்சய த்ரிதியை என்றால், பொன், பொருள் வாங்கி
சேர்ப்பதே ஒரே குறிக்கோள் என்று நம்மில் பலரை
பலவிதமான கவர்ச்சி விளம்பரங்கள் கவர்ந்து
இழுக்கின்றன

உண்மையில் இந்த நாளின் மகத்துவம் எவ்வளவு
பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை
நான் படித்து அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து
கொள்கின்றேன்

வனவாசத்தின் போது பாண்டவர்களாகிய தங்களுக்கும்
தம் குடில் நாடி வருவோருக்கும் உணவளிக்க, இந்த
நாளில் தான் சூரியனிடமிருந்து பெற்ற அட்சய
பாத்திரத்தை திரௌபதிக்கு அளித்தார் தருமர்.


பராசக்தி எடுத்த பலவடிவங்களுள் காய், கறி, பழங்கள்,
மூலிகைகளோடு சாகம்பரி தேவியாக ஆவிர்ப்பவித்த
பொன்னாள் இந்த திரிதியை நாள்

நான்முகன் கிருதயுகத்தில் படைப்புத் தொழிலைத்
தொடங்கிய நாளாக அட்சய திரிதியை நாள்
கருதப்படுகிறது

நவநதிகளுக்கும் அதிபதியான குபேரன் ஈசனை வேண்டி
வரம் பெற்று அன்னதிகளுக்கெல்லாம் அதிபதியானது
இந்நாளில் தான்.


கௌரவர் சபையிலே திரௌபதியின் மானம் காக்க
சேலையை 'அட்சய...' என கிருஷ்ணன் வளர்த்து
லீலை புரிந்ததும் இந்நாளிலே

அஷ்டலட்சுமிகளுள் தான்ய லட்சுமியும், தனலட்சுமியும்
தோன்றிய திருநாள் இது

சனீஸ்வர பகவான் திருமணம் செய்துகொள்ள ஈஸ்வரன்
அருள்புரிந்த நாள் அட்சய திரிதியை

அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும்
16 கருடசேவை தரிசனம் புகழ் பெற்றது.

திருவானைக்காவல் கிழக்கு கோபுரத்தில் அருளும்
குபேரலிங்கம் இந்தநாளில் விசேஷமாக
வழிபடப்படுகின்றது

சென்னை - ரத்னமங்கலம் லக்ஷ்மி குபேரருக்கு அட்சய
திரிதியை அன்று விசேஷமாக அபிஷேக அலங்கார ,
ஆராதனை செய்து வழிபடப்படுகின்றது

நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையத்திற்கு
அருகே உள்ள கோதண்டராமர் ஆலயத்தில் அட்சய
த்ரிதியை அன்று உதய கருடசேவையின் போது
ஸ்ரீநிவாசரையும், ஸ்ரீராமரையும் ஒன்றாக
சேவிக்கலாம் .

தஞ்சாவூரில் உள்ள விலாங்குளத்தில் உள்ள
அட்சயபுரீச்வரரையும் அபிவிருத்தி நாயகியையும்
இந்தநாளில் வணங்க வாழ்வில் சகல வளங்களும் கிட்டும்.


அட்சய த்ரிதியை அன்று கும்பகோணம் பட்டீஸ்வரம்
அருகே உள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில்
விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன

அட்சய த்ரிதியை அன்று அன்னதானம் அளித்தல் ஆயுள் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

மஹாளயா அமாவாசை போன்றே பித்ரு தர்பணங்கள்
செய்ய உகந்த நாளாக இந்நாள் கருதப்படுகின்றது.

ஏழைக் குசேலனை குபேரனாக கிருஷ்ண பரமாத்மா
மாற்றியருளியது ஒரு அட்சய த்ரிதியை நாளே

அட்சயம் எனும் பொருளுக்கு அள்ள அள்ள குறையாதது
என்று பொருள். அதனால் இந்நாளில் செய்யும் நற்காரியங்கள்
பொங்கிப் பெருகும் என்பது பொதுவான நம்பிக்கை.

வடஇந்தியாவில் இந்நாளை அகதீஜ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது


அட்சய த்ரிதியை நாளில் விரதமிருந்து தானம் செய்த
மகிமையே தேவேந்திரன் மகாபலிச் சக்ரவர்த்தியை
திருமாலின் துணை கொண்டு வென்றான்.

இந்திராணி ஜெயந்தனைப் பெற்றதும், அருந்ததி
வசிஷ்டருடன் சப்தரிஷி மண்டலத்தில் இடம்பெற்றதும்.
ரோகினி சந்திரனை மணந்ததும், அட்சய த்ரிதியை
அன்று தானம் செய்து விரதம் இருந்த மகிமயாலேதான்.



ஈசன் கையில் ஒட்டிய பிரம்ம கபாலத்தை நிரப்ப திருமகள்
அவருக்கு அன்னம் பாலித்த நாள் அட்சய த்ரிதியை.
அன்னபூரணி தேவி ஈசனுக்கு படியளந்த பொன்நாளும் இதுவே.

No comments:

Post a Comment