Thursday, April 18, 2013

அன்னை தந்தையிடம் விசுவாச பக்தி - By காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்

அன்னை தந்தையிடம் விசுவாச பக்தி - By காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்




அன்னை தந்தையை முதலில் சொல்லி தேவோ பவ என்ற பிறகுதான் வேதம் ஆசார்ய தேவோ பவ என்று சொல்கிறது. இன்னொரு விதத்தில் பார்த்தால், அம்மா அப்பா முதலில் குருமார்களாக இருந்துதான், பிறகு உபநயனத்தின் போது குரு என்றே சொல்லப் படுபவரிடம் பிள்ளையை ஒப்படைக்கிறார்கள்.

ஆசார்யவான் என்று ஒரு வார்த்தை உண்டு. நல்லாசிரியனை உடைய ஸச்சிஷ்யன் என்று அதற்குப் பொருள். ஆசார்யவான் புருஷோ வேத என்று சாந்தோக்ய உபநிஷத்தில் இருக்கிறது. நல் ஆசானை உடைய மனிதனே ஞானம் அடைகிறான் என்று இதற்கு அர்த்தம்.

ஆசார்யவான் என்ற இந்த வார்த்தைக்கு முன் மாத்ருமான், பித்ருமான் என்ற இரண்டு வார்த்தைகளையும் போட்டு ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் மந்திரங்கள் உள்ளன.

யாக்ஞவல்கிய மஹரிஷியிடம் ஜனகர் தமக்குப் பல குருமார்கள் செய்த உபதேசங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு போகிறார். அப்போது அந்த ஒவ்வொரு குருவும் உபதேசித்தது சரிதான் என்று யாக்ஞவல்கியர் ஏற்கும்போது, அந்த ஒவ்வொருவரைப் பற்றியும், அம்மா, அப்பா, குருவாக இருக்கும் ஒருவர் எப்படி உபதேசிக்க வேண்டுமோ அப்படி இவர் உபதேசித்திருக்கிறார் என்று பாராட்டிச் சொல்வதாக உள்ளது.

இப்படி மூன்று பேரால் தூய்மைப் படுத்தப்பட்ட சுத்தித்ரய ஹேதுஸம்யுக்தன்தான் பிற்காலத்தில் தானும் சாட்சாத் ஆசார்யன் என்னும்படி அவ்வளவு யோக்யதையுடன் கூடிய குருவாகிறான். அவன்தான் சாஸ்திர பிரமாணத்திலிருந்து வழுவாமல் சொல்லிக் கொடுப்பான் என்று போற்றிச் சொல்லியிருக்கிறார். ஆக, எட்டு வயதில் குருகுல வாசத்தில் சேர்கிறதற்கு முன்பே பிஞ்சாக இருக்கிற குழந்தையை நயமாகவும் பயமாகவும் நல்ல வழியில் நடத்தும் ஆசார்ய பொறுப்பை தாய் தந்தையர்களும் வகிக்கிறார்கள். இதுவே ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் லேசாகக் காட்டப்பட்டுள்ள விஷயம்....

இப்படி, அம்மா சரணமில்லை, அப்பா சரணமில்லை, குருதான் சரணம் என்று சங்கர பகவத்பாதர் சொல்கிறார் என்பதால், நாம் குருவுக்கு சரணாகதி பண்ணாவிட்டாலும், அம்மா அப்பாவை கழித்துக் கட்டுவதையாவது பண்ணி விடலாம் என்று யாரும் புறப்படாமல் இருப்பதற்குத்தான் ஏற்கெனவே உலகத்தில் மாத்ரு பக்தி, பித்ரு பக்திகள் குறைந்து விட்டிருக்கிறது.

தலைமுறை இடைவெளி அது இது என்று சமாதானமும் சொல்லியிருக்கிறது இந்த நிலையில், சங்கர பகவத்பாதர் சொன்னதில் நாமும் ஒன்றையாவது செய்ததாக இருக்கட்டும் என்று யாராவது அம்மா அப்பாவை கழித்துக் கட்ட அவர் வாக்கை ஆதாரமாக எடுத்துக் கொண்டுவிடப் போகிறார்களே என்பதற்காக இதைச் சொன்னேன்.

ஆத்ம லோகத்தில் கை தூக்கிவிட அம்மா அப்பாவிடம் முட்டிக் கொண்டு ப்ரயோஜனமில்லை என்ற அர்த்தத்தில் அவர் சொன்னதை, இந்த லோக விஷயமாகப் பண்ணிக் கொண்டால் அது அடியோடு தப்பாகி விடும். தாய் தந்தையிடம் எந்நாளும் பக்தி, விசுவாசம், நன்றிகளோடுதான் இருக்க வேண்டும். ஆனாலும் ஆத்மாவைக் காத்து அதைப் பரம லட்சயத்தில் சேர்ப்பிப்பதற்கு அவர்களிடம் போய் நிற்காமல், குரு சரணத்தில்தான் போய் விழ வேண்டும்.

சரீரத்தை வளர்ப்பதையே அம்மா-அப்பா முக்கியமாகப் பண்ணி, கொஞ்சம் நல்ல வழியும் சொல்லிக் கொடுப்பார்கள். நல்ல வழியே சொல்லிக் கொடுப்பவர், ஆத்மாவையே கவனித்து அதற்கான நல்ல வழியே சொல்லிக் கொடுப்பவர் ஆசார்யன்தான்.

அப்படி நல்ல வழி உபதேசித்து, கூடவே அவரும் ஒரு வழிகாட்டியாக அந்த வழியில் வருகிற பரம உபகாரத்தை வைத்து அவருக்குக் கொடுத்துள்ள பேர்தான் தேசிகன். அப்பா-அம்மா நமக்காக எத்தனையோ செய்தாலும் நம் ஆத்ம விஷயத்தில் அவர்களுடைய ஆசா பாசத்தினால் நம்மையும் திசை தவறுமாறுகூடப் பண்ணுவதாகவே நிறையப் பார்க்கிறோம். கல்யாணம் பண்ணிக் கொள்வதில்லை. சந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் ஸந்ததி இருந்தால் அவர்களுக்கு ஏற்பதேயில்லை. பிள்ளை நிறைய சம்பாதிக்கணும்

அவனுக்கு தங்கள் நிறைய சொத்து வைத்துவிட்டுப் போக வேண்டும் என்றெல்லாம் ஆத்மஅபிவிருத்திக்கு எதிரியான விஷயங்களையே அவனுக்குச் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

ஒரு விரதம், உபவாஸம் பிள்ளை இருந்தால்கூட, இப்பவே பிடிச்சு ஏதுக்கு இதெல்லாம் என்று கலைக்கிற மாதா பிதாக்கள் பலபேர். ஆகையால் அவர்களுடைய வாத்ஸல்யம், தியாகம் முதலியவற்றுக்காக நாம் அவர்களிடம் எந்நாளும் நன்றிக்கடன் பட்டு நமஸ்காரம் பண்ணத்தான் வேண்டுமென்றாலும், அவர்கள் நம்மிடமுள்ள ஆசையாலேயே ஆத்ம மார்க்கத்தில் நம்மை திசை தவறச் செய்வதால் இங்கே குருவாகிற தேசிகனைத்தான் ஒரே பிடி என்று பிடித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment