Thursday, April 18, 2013

நரசிங்கருக்காக வந்த தேர்!

நரசிங்கருக்காக வந்த தேர்!






ஜம்புலிபுத்தூரில் கதலிநரசிங்க பெருமாள் அருள்புரியும் இடம் சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நாவல் மரங்களும், சம்பை புல்லும் சூழப்பட்ட புதர்களாக இருந்தது.

முன்பு இப்பகுதியில் ராஜகம்பளத்து நாயக்கமார்களின் மாட்டுத் தொழுவம் இருந்ததாம். அவர்கள் பாலை கறந்த பின்பு தொழுவத்தில் வைத்திருக்கிறார்கள். ஒருமுறை அவ்வாறு வைத்த பாலை காணவில்லை. இப்படியே பல நாட்கள் சென்றன. உண்மையைக் கண்டுபிடிக்க, ஒளிந்திருந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது நாவல் மரத்தின் அருகே இருக்கும் புற்றில் இருந்து வந்த நல்ல பாம்பு பாலை குடித்து விட்டு மீண்டும் புற்றுக்குள் சென்றதாம். இதையடுத்து புற்றினை மண்வெட்டியால் வெட்ட அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. திடுக்கிட்டவர்கள் புற்றை அகற்றிப் பார்த்த போது, சுயம்பு விக்ரஹம் ஒன்று வெளிப்பட்டதாம். அதில் இருந்து தான் இரத்தம் வெளிவந்ததாம். அந்த சுயம்பு கதலிவாழை போல் இருந்ததாம்.

புற்றினை வெட்டியவரின் கனவில் தோன்றிய பெருமாள் "பாம்பு வடிவில் வந்தது நான்தான். கதலி வாழை போல் நரசிங்க வடிவில் இருந்தேன். என்னை அதே புற்று இருக்கும் இடத்தில் வைத்து வழிபடுங்கள்' என்றாராம். இதனால் ஆனந்தம் அடைந்த நாயக்கமார்கள் கதலி நரசிங்கபெருமாளை வழிபட்டு வந்தார்கள். தற்போதைய கோயில் திருமலைநாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.

இக்கோயிலில் சுயம்புவாய் வெளிப்பட்ட கதலிநரசிங்கப் பெருமாள் மூலவராக அருள்புரிகிறார். அவருக்கு எதிரே கருடாழ்வார். கிழக்கு நோக்கி செங்கமலத்தாயார் அருள்கிறார்.


ஆஞ்சநேயர்,பைரவர்,விஸ்வக்சேனர்,துவாரபாலகர்கள் ஆகியோரும் அருள்புரிகின்றனர். தல விருட்சமாக நாவல்மரம் விளங்குகிறது.

இக்கோயிலில் சுவாமி புறப்பாட்டிற்கு தேர் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் பெருமழை பெய்ததாம். அப்போது தெப்பம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயிலில் உள்ள தேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோயில் அருகே வந்து நின்றது. இத்தகைய சிறப்புமிக்க தேர் சுவாமி புறப்பாட்டிற்கு பயன்பட்டு வந்தது. தற்போது சிதிலமடைந்ததைத் தொடர்ந்து செப்பனிடப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல்25 ஆம் தேதி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்: இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறுகிறது. முக்கியத் திருவிழாவான சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா கடந்த ஏப்ரல் 17ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 23ஆம் தேதி திருக்கல்யாணமும், 25ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடக்கின்றன. 28ஆம் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

அமைவிடம்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் ஜம்புலிபுத்தூரில் அமைந்துள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து 3 கீ.மீ. தெலைவிலும் பெரியகுளத்தில் இருந்து 17 கீ.மீ. தொலைவிலும் உள்ளது. ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளம் செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலை அடையலாம்.

தரிசன நேரம்: காலை 7 - 12, மாலை 5 - 9.

No comments:

Post a Comment