Thursday, February 21, 2013

விதிமுறை வழிபாடும்,அன்பு வழிபாடும்!

விதிமுறை வழிபாடும்,அன்பு வழிபாடும்!





காஞ்சி ஸ்ரீமகாபெரியவர்

தகவல் வெள்ளிமணி தினமணி

வைதேய பக்தி, ராக பக்தி என்று இரண்டு உண்டு. விதிப்படி சாஸ்திர வழியிலே உபாசனை செய்வது வைதேய பக்தி. இப்படி வழிபாட்டுக் கிரமம் என்று இல்லாமல் நம் அன்பில் எப்படியெல்லாம் பகவானிடம் பிரார்த்திக்கவும், உறவு கொண்டாடவும் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் பக்தி பண்ணுவது ராக பக்தி. அநுராக பக்தி என்றும் சொல்வார்கள். தற்காலத்தில் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படக்கூடாது என்ற மனப்பான்மை பரவியிருப்பதால் எல்லாரும் தங்களுக்கு ராக பக்தி இருக்கிறதாகவும், அதனால் விதிப் பிரகாரம் ஒன்றும் பண்ணத் தேவையில்லை என்று நினைப்பதாக ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் நமக்கு அப்படியெல்லாம் ஒன்றும் சுத்த பிரேமை பகவானிடம் பொங்கிக்கொண்டு வந்துவிடவில்லை. அதுமட்டும் வந்திருந்தால் நாம் இருக்கிற தினுசே வேறேயாக இருக்கும்.

பரித்யாகத்தில்- எல்லா உறவுகளையும் முற்றிலும் தியாகம் செய்வதில்- ஏற்படும் சரணாகத பாவம், ஈஸ்வரனிடம் வைக்கிற பிரேமையின் பிரதிபலிப்பாக அனைத்து உயிர்களிடமும் அன்பு என்ற உத்தமமான குணங்களோடு இருப்போம்.வைதேய பக்தியும்கூட வறட்டு வறட்டு என்று புஸ்தகப்படி ஒரு மெக்கானிக் தன் ஷாப்பில் காரியம் பண்ணுகிற மாதிரி இல்லாமல் பிரேம பாவத்துடனேயே பண்ண வேண்டும் என்பதுதான் சாஸ்திரம்.

விதிப்படி ஒழுகுவதே வைதேயம். அந்த விதிகளில் அடிப்படையாக பிரேமை வேண்டும் என்பதும் ஒன்று. பூஜையின் ஆரம்பத்தில் ஆத்ம பூஜை என்று ஒன்று செய்துவிட்டு, அப்புறந்தான் வெளியில் இருக்கிற பிரதிமைக்குப் பூஜை செய்யவேண்டும். அந்த ஆத்ம பூஜையில், பூஜை செய்கிற தன்னுடைய தேகமே பகவான் இருக்கிற தேவாலயம், பூஜை செய்கிற ஜீவனான தானே பூஜிக்கப்படும் தேவனான பகவான். முந்தைய பூஜையில் அர்ச்சனை செய்த புஷ்பம் முதலான நிர்மால்யத்தை எடுத்துப்போட்டு இந்தப் புதுப் பூஜை ஆரம்பிக்கிற மாதிரி. ஜீவனும் தேவனும் வேறே வேறே என்று நினைக்கிற அஞ்ஞானத்தைத் தள்ளிப்போட்டு விட்டு அவனே நான் என்ற பாவனையுடன் பூஜிக்கணும் என்று விதி செய்திருக்கிறது. இப்படி அவனே நாம் என்றால் அவனிடம் எத்தனை அத்யந்த பிரேமை - அநுராகம் - என்பது இருக்க வேண்டும்! ஆனால் இப்படி சிறிது நேரத்திற்கு வேண்டுமானால் நமக்கு அவனிடம் நானே அவன் என்பதில் இருக்கிற அதி பிரேமை - அநுராக பக்தி - சிறிது ஏற்படலாமே தவிர அதையே நீட்டித்துக் காக்க முடிவதில்லை. தற்காலத்தில் அந்த மாதிரி எல்லாரும் இருப்பதாக, அல்லது சுலபத்தில் இருந்துவிட முடியும் என்பதாகப் பேசுவது வெறும் புரளிதான், விதிக்குக் கட்டுப்படாத அடங்காமைக்கு ராக பக்தி என்று பொய்யாகப் பேர் தருவதுதான்.

No comments:

Post a Comment