Friday, January 25, 2013

தைப்பூசத் திருநாளில்


வாரும் வாரும் வள்ளி மணாளரே!

""ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னைத்

தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே'' என்னும் திருப்பாட்டின்படி ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் ஆறுமுகனின் சேவடியைத் தேடிக்கொண்டும், தோளில் காவடியைச் சூடிக்கொண்டும் தைப்பூசத் திருநாளில் பழனிமலையை நோக்கிச் செல்லும் பக்தர்களின் கூட்டம்தான் எத்தனை எத்தனை!

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குழு, குழுவாக வரும் பக்தர்கள் பூசத் திருநாளில் பொன்னான வேலனை வழிபட்டு பூரண அருளைப் பெறுகிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் விரதம் இருந்து பலர் வருகிறார்கள்.


அப்படி என்ன தைப்பூசத்திற்கு தனி விசேஷம் என்று புராணக் கதைகளைப் புரட்டிப்பார்த்தால் புரிந்துவிடும். ஆம்! அன்றுதான் கந்தன் வேலவன் ஆனான். கந்தன் என்றால் "சேர்த்துக்கட்டிய திருமேனி அமைந்தவன்' என்று பொருள். சரவணத்தில் ஆறு கமல மலர் மீது அழகிய ஆறு குழந்தைகளாக தனித்தனியாகத் தவழ்ந்தவன் அவன். அம்பிகை வந்து ஆறு குழந்தைகளையும் அன்பு மீதூர ஒரு சேர அணைத்தாள். தனித்தனியாக இருந்த குழந்தைகள் ஒரு மேனியும், ஆறு முகங்களுமாய் ஒன்றாகிச் சேர்ந்து ஒளிர்ந்தது. குமர குருபரர் கந்தர் கலி வெண்பாவில் இந்நிகழ்வை ""கையால் எடுத்தணைத்து "கந்தன்' எனப் பேர் புனைந்து மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்து'' என்று பாடுகிறார். "கந்தன்' பெயருக்கான காரணத்தை அறிந்துகொண்டோம். இனி வேலவன் ஆகி விளங்கியதைப் பார்க்கலாம்.

ஆறு முகங்களும், பன்னிரு திருத்தோள்களுமாய் அழகு பொங்க விளங்கினான் முருகன்.கந்த பெருமானின் கணக்கற்ற திருவிளையாடல்களால் விண்ணுலகத்தினர் மகிழ்ந்தனர். ஆனாலும் திருமுருகனின் அவதார நோக்கம் சூரனை அழித்து தேவர்களை வாழச் செய்வதுதானே!


சூரசம்ஹாரத்திற்கு முருகன் புறப்பட வேண்டுமல்லவா! முருகன் பன்னிரண்டு கரங்களிலும் ஆயுதம் ஏந்தி லட்சத்து ஒன்பது வீரர்கள் பின் தொடர தேவசேனாதிபதியாகத் திகழ்வதற்கு மூலகாரணமாகவும் அம்பிகையே விளங்கினாள்.
கந்தப் பெருமானுக்கு அம்பிகைதான் வேல் வழங்கினாள். வேல் வழங்கிய அந்த விமரிசையான தினம்தான் தைப்பூசம்.
சூரனுக்கும் சுரர்களுக்கும் இடையிலே இருந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு சிக்கலிலே வேல் தந்தாள் என்பதும்
ஐதீகம்.
"சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது பழமொழி.
அம்பிகை வேல் தரும் வைபவம் தற்போதும் சிக்கலிலே தனி விழாவாக நடந்து வருகிறது.
ஏகாதச உருத்திரர்களை பதினொரு ஆயுதங்களாக பரமசிவன் ஆக்கித் தந்தார்.
அவையே தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், தாமரை, தண்டு, வில், மணி, மழு ஆகும். பன்னிரண்டாவது ஆயுதமாகத் தைப்பூசத் திருநாளில் பராசக்தி வேல் வழங்கினாள்.
போரிட்டு வெற்றி பெறும் சக்தியை சக்திதானே வழங்க வேண்டும். வேலவனாக கந்தன் ஆனதால் தேவர்களின் உலகம் நலம் பெற்றது. மண்ணுலகத்தினரும் மகிழ்ச்சி பெற்றிடத்தான் தைப்பூசம் தனி விசேஷமாகக் கொண்டாடப்பெறுகிறது.
சூராதி அவுணர்களுக்கு போர்ப் பயிற்சி தந்தவன் இடும்பன். சூரசம்ஹாரம் ஆன பிறகு தன் செயலுக்கு வருந்தினான் இடும்பன். எதிர்த்த சூரனையே சேவலும் மயிலுமாக ஆக்கி ஆட்கொண்ட பண்பாளர் முருகனை பணிய விரும்பிய இடும்பன் அதற்கான வழிமுறையை அகத்தியர் மூலம் அறிந்தான். அகத்தியர் ஆணையிட்ட வண்ணம் சிவமலை, சக்தி மலை இரண்டையும் தோள்களில் காவடி போல சுமந்து வந்தான். பின் அகத்திய குருநாதர் மூலம் ஆறுமுக பெருமானின் அடிபணிந்தான்.
சூரனுக்கே பெருவாழ்வு தந்தவர் இடும்பனையும் வாழ வைத்தார். "ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி தீது புரியாத தெய்வமே' என்றுதான் அடியவர்கள் ஆறுமுகப் பெருமானை போற்றி மகிழ்கிறார்கள்.
"இடும்பா! உன் சரணாகதியை மெச்சுகிறேன். உன் சந்நிதி பழனிமலையின் நடுவில் அமையட்டும். காவடி எடுத்து வருபவர்கள் உன்னை முதலில் பணிந்தே உச்சிக்கு வர வேண்டும். பின்னர்தான் என் தரிசனம் பெற வேண்டும்' என்றார் முருகப் பெருமான். பகவானைவிட பக்தனுக்குத்தானே அதிக சிறப்பு. "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'. அதனால்தான் தைப்பூசக் காவடிகளும், பாத யாத்திரை அன்பர்களின் வழிபாடுகளும் பழனியில் இடும்பனுக்கே முதலில். இவ்வண்ணம் வாழ்வியல் கூறுகள் பல முருகன் வழிபாட்டில் முதலிடம் பெறுகின்றன. பகைவனுக்கு அருளும் பாங்கு புலப்படுத்தப்படுகிறது.
சென்னை கந்தகோட்ட முருகன் அருளால் ஒன்பது வயதிலேயே உதடுகள் திறந்து உன்னதமான திருவருட்பாவை பாடியவர் திருவருட் பிரகாச வள்ளலார். வள்ளலார் பெருமான் சித்தி பெற்றதும் தைப்பூசத்
திருநாளில்தான்.
"வாரும்! வாரும்! தெய்வ வடிவேல் முருகரே!
வள்ளி மணாளரே வாரும்!
புள்ளி மயிலோரே வாரும்!'
என்று காவடி ஆட்டத்திற்கேற்ப தாளம் கொஞ்ச தமிழ் பொழிகிறார் வள்ளலார்.
முருகப் பெருமானின் மயில்வாகனமும் காவடி போலத்தானே முருகனைச் சுமந்து நடனம் ஆடுகிறது. அவனின் கோழிக் கொடியும் அன்பர்களின் ஆரவாரம் போலத்தானே கூக்குரல் இடுகிறது.
தைப்பூசத்தில் முருகனின் தரிசனத்தைக் காண நமக்கு இரு கண்கள் போதுமா?
நாலாயிரம் கண்கள் வேண்டும். "முருகனால் குட்டுப் பெற்றும் நான்முகனுக்குத் தெரியவில்லையே! முருகன் அடியார்களுக்கு இரு கண்கள் போதாது என்று' என வாக்கிற்கு அருணகிரி நயமாகப் பாடுகிறார்.
சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வைத் தரும் சண்முகனைத் தைப்பூசத்தில் வழிபட்டு நலம் பல பெறுவோம்.