Saturday, October 20, 2012

ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதார தினம் இன்று

ஸ்ரீ மணவாள மாமுனிகள்  அவதார தினம்  இன்று




" செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே"


கி.பி. 1370-ம் வருடம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர் மணவாள மாமுனிகள். இவரது இயற்பெயர் அழகிய மணவாள நாயனார். முதலில் தன் தந்தையிடமும் பிறகு பிள்ளை லோகாச்சாரியாரிடமும் சாஸ்திரங்களைக் கற்றார். அதன்பிறகு பிள்ளை லோகாச்சாரியாரின் சிஷ்யர் திருவாய்மொழிப் பிள்ளையிடம் ஆழ்வார்களின் அருளிச் செயலைக் கற்றார். இந்த ஆசார்யன், மணவாள மாமுனிகளிடம், முந்தைய குருபரம்பரை ஆசார்யர்கள் வகுத்தவற்றை உபன்யாசமாக எங்கும் பரப்பச் சொன்னார். ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோர் குறிப்பிடப்படுவர். இவர் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் யதீந்திர ப்ரவணர் என்று திருவாய்மொழிப் பிள்ளையால் சிறப்புப் பெயர் பெற்றார். ராமானுஜரின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் எனவும், ஆனால் அவர் தமது 120வது வயதிலேயே சித்தியடைந்துவிட்டதால் மீதமுள்ள 80 ஆண்டுகளை மணவாள மாமுனிகளாக எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் சொல்வர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலங்களுக்குச் சென்ற மாமுனிகள், காஞ்சியில் கிடாம்பி நாயனாரிடம் பாஷ்யம் கேட்டறிந்தார். ஆன்மிகப் பணிக்கு இல்லறம் ஏற்றதாக இல்லையென்று, திருவரங்கத்தில் மகான் சடகோப ஜீயரிடம் துறவறம் ஏற்று, மணவாள மாமுனிகள் என்று திருநாமம் பெற்றார். எறும்பியப்பா என்பவர் மாமுனிகளின் சீடராக விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. வருத்தத்துடன் சொந்த ஊர் திரும்பினார். ஒரு நாள் அவர் கனவில் ராமபிரான் தோன்றி, நீர் மணவாள மாமுனிகளிடமே சென்று சேரும் என்று கூற, மறுபடியும் ஸ்ரீரங்கம் வந்து மாமுனிகளின் சீடர் ஆனார். மணவாள மாமுனிகள்மீது பொறாமை கொண்ட சிலர் ஒருசமயம் அவரது குடிலுக்குத் தீ வைத்தனர். ஆனால் மாமுனிகளோ தன் சுயரூபமான நாகவடிவம் பெற்று குடிலிலிருந்து வெளிவந்து, கூட்டத்தோடு கலந்தார். இதை அறிந்த அவ்வூர் அரசன் குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க முயன்றார். மாமுனிகளோ அவர்களை மன்னித்தருளினார்.

மணவாள மாமுனிகளின் திருவாய்மொழி உபன்யாசத்தை ஸ்ரீரங்கம் பெரிய மண்டபத்தில் தொடர அருளிய பகவான் ஸ்ரீரங்கநாதர், அதை செவிமடுத்தது தனிச் சிறப்பு. ஒருநாள், இவர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், கூட்டத்தாரை விலக்கிக் கொண்டு, மாமுனிகளிடம் ஓர் ஓலையைக் கொடுத்து திடீரென மறைந்து போனான். அதில் சைலேசரின் கருணைக்கு உரியவரும் ராமானுஜரின் பக்தருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன் என்று எழுதியிருந்தது. குருபரம்பரையின் கடைசி ஆசார்யரான மாமுனிகள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகியவற்றை அருளியதுடன் பிற ஆசார்யர்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment