Sunday, September 9, 2012

மண வாழ்க்கை சிறக்க

                                                            

                                                                

                                                          மண வாழ்க்கை சிறக்க...



பலனை எதிர்பார்த்து இறைவனை வேண்டுதல் கூடாது எனினும், நம் பக்திக்கேற்ற பலனைத் தருதல் பகவானின் இயல்பு. இதன் காரணத்தாலேயே "பக்தி செய்து உய்யுங்கள்' என்று பெரியோர் கூறினர்.

                                                                           


திராவிட வேதம் என்றும் தமிழ்மறை என்றும் முன்னோர் வகைப்படுத்திய நம்மாழ்வாரின் பாசுரங்களை மனமுருகிச் சொன்னால் அதற்கான பலன் நாம் வேண்டாமலேயே நம்மை வந்தடையும். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் எட்டாம் பத்து, பத்தாம்
திருவாய்மொழியில் வரும் பாசுரம் இது. இதில், "பெருமானின் புகழ்பாடும் இந்தப் பத்து பாசுரங்களையும் பாடவல்லவர்க்கு மண வாழ்க்கை சிறக்கும்' என்கிறார் நம்மாழ்வார்.

""நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே''

- ஆழ்வார் நம்மைவிட்டு நம் அடியார்களைத் தேடி ஓடுகிறாரோ என்று வெறுப்படையாமல், நம்மிடத்திலே இவர் வைத்த அன்பு நம் தொடர்புடைய அடியார்கள் இடத்திலும் பெருகுவதே என்று மிக உகந்தார் எம்பெருமான். வேதம் போலே தானே தோன்றாது, இந்தத் திருவாய்மொழியானது ஆழ்வாரின் திருவாக்காய் வெளியாகி மேலும் சிறப்பு பெற்றுவிட்டது என்பர் பெரியோர்.

பாசுரத்தின் கடைசி அடியில், இத்திருவாய்மொழியைக் கற்பதால் சொல்லப்படும் பலன், சம்ஸார வாழ்க்கையாக இருக்கின்றதே, இது சரிதானா என்று சிலர் விவாதித்தனர். அதற்கு பூர்வாசாரியர்கள், கூரத்தாழ்வான், அனந்தாழ்வான் போன்ற ஆசார்யர்களைப் போல், குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே, பகவத் பாகவத கைங்கரியத்துக்கு துணைபுரியும் இல்லாளும் புத்திரர்களுமாய்ப் பெற்று, பகவத் கைங்கரியம் மேன்மேலும் சிறக்கும்படியாக இருக்குமே என்று விளக்கினர். இதனாலேயே நல்ல பதத்தால் மனை வாழ்வீர் என்றார் ஆழ்வார்.

இந்தப் பாசுரத்தை விளக்க ஒரு சம்பவத்தைச் சொல்
வார்கள்.

ஸ்ரீராமானுஜர் ஒருமுறை திருவனந்தபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்டார். பரிவாரம் புடைசூழ அவர் திருக்கோஷ்டியூரில் செல்வநம்பி என்பவரின் இல்லத்துக்குச் சென்றார். அப்போது செல்வநம்பி வெளியூர் சென்றிருந்தார். வருந்தி அழைத்தாலும் எளிதில் வாராத உத்தமர்கள் வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் உணவு சமைத்தாக வேண்டும். இல்லத்தில் விதை நெல்லைத் தவிர வேறில்லை. சிறிதும் சஞ்சலம் கொள்ளாது, விதை நெல்லைச் சமைத்து, ஸ்ரீராமானுஜர் மற்றும் உடன் வந்தோருக்கு உணவிட்டார் செல்வநம்பியின் மனையாள் நங்கையார். மறுநாள் இல்லம் வந்த செல்வநம்பிகள், விதை நெல்லைக் காணாது, காரணம் கேட்க, பரமபதத்திலே நெல்லை விதைத்துவிட்டேன் என்றாராம் நங்கையார். இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை, ஆழ்வாரின் மங்களா சாசன பலத்தினாலே வந்ததன்றோ! அருகில் நீ இன்றேல் வணங்குவரோ...?
சிவனும் சக்தியுமாய் சேர்ந்து பொலிகின்ற நிலையை வணங்குதலையே தலையாகக் கொண்டவர்கள் நம் பக்தர்கள். சக்தி உடன் இல்லாது சிவபெருமானை நெருங்க மாட்டார்களாம்.

இவ்வாறு "அபீதகுசாம்பாள் ஸ்தவத்தில்' அப்பய்ய தீட்சிதர் கூறுகிறார். அபீதகுசாம்பாள் ஸ்தவம் 6 வது சுலோகத்தில், "கழுத்திலே விஷம். ஜடையிலோ நஞ்சைக் கக்கும் கொடிய பாம்புகள். பக்கத்திலோ பயத்தை ஏற்படுத்துகின்ற பூத நாயகர்களான கணங்கள். இத்தகைய தோற்றத்தில் திகழும் அருணகிரி நாதனை... ஹே தாயே அருகில் உன்னுடைய சாந்நித்தியம் இல்லாவிட்டால் யார்தான் போய் வணங்குவார்கள்?' என்று பாடுகிறார் அப்பய்ய தீட்சிதர்.

No comments:

Post a Comment