சமயப் பிரிவுகளுக்கு மதம் என்று பெயர். இந்து சமயத்தில் இன்று சைவம், வைணவம் என்று இரு பிரிவுகள் இருந்தாலும், ஒரு காலத்தில் இந்து சமயம் ஆறு பிரிவுகளாக இருந்தது. சிவ மதம்(சைவம்), விஷ்ணு மதம்(வைணவம்) என்பதோடு சக்தியை வழிபடுவோர்(சாக்தம்), முருகனை வழிபடுவோர்(கவுமாரம்), கணபதியை வழிபடுவோர்(கணாபத்யம்) சூரியனை வழிபடுவோர் (சவுரம்)என்று தனிப்பிரிவுகளாக இருந்தனர். கணபதியையே பரம்பொருளாகக் கருதி வழிபடும் முறையே கணாபத்யம். இது தமிழில் காணபதம் எனப்பட்டது. இந்த வழிபாட்டை நடத்துவோர் காணபதர். இவர்கள் கணபதி மூலாதார சக்தி உருவினர் என்றும், பிரணவம் என்ற ஓங்கார வடிவினர் என்றும், அவருடைய துதிக்கை அந்த ஓங்காரத்தையே குறிக்கும் என்று கூறுவர். காணபத்தியர் கணபதியின் பெயருக்கும் அவருடைய அங்கங்களுக்கும் தத்துவ விளக்கம் கூறுவர். கணபதி என்னும் பதத்திலுள்ள க என்பது மனோவாக்குகள்; ண என்பது அவற்றைக் கடந்த நிலை. அவ்விரண்டுக்கும் ஈசன் கண-ஈசன்= கணேசன்!
வக்ரதுண்டர் என்னும் அவருடைய பெயர் கொடிய மாயையைத் துண்டிப்பவர் என்றும் லம்ப உதரர் (பெரிய வயிறர்) என்னும் அவருடைய பெயர் தம் அறிவிற்குப் புலனான பிரபஞ்சம் முழுவதையும் உண்டு தம்முள் அடக்கிக் கொள்பவர் என்றும் பொருள்படும். ஊர்கிற அவரது வாகனமான மூஷிகம் நமக்குள் இருந்து நம்மை அழிக்கும் கள்ளத் தன்மையான உலகப் பற்று என்றும், அவர் உண்ணும் மோதகம் இன்பத்தைப் பயக்கும் ஞானம் என்றும் கூறுவர். (மாவை அப்படியே உருட்டிப் பிடித்து வைத்தால் கொழுக்கட்டை உள்ளே இனிப்புப் பூரணம் வைத்துச் செய்தால் மோதகம்) கணாபத்யர்களுக்கு ஆதாரமான நூல்கள் கணபதி உபநிடதம் ஹேரம்ப உபநிடதம் என்ற இரு சிறு உபநிடதங்கள். கணேச புராணம், ஸ்காந்தத்தில் உள்ள கணேச மான்மியம், பிரம்ம வைவார்த்த புராணத்திலுள்ள கணேச காண்டம், முத்கல புராணம் என்ற புராணங்களும் கணேச கீதை, கணேச தந்திரம், கணேசகல்பம், கணேசா சார சந்திரிகை முதலிய தனி நூல்களும் ஆகும். தமிழில் பார்க்கவ புராணம் என்னும் பெயரில் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் பாடியிருக்கிறார்.
கணபதி ஐம்பத்தொரு வகை இருப்பதாக ராகவ பட்டர் என்பவர் சாரதா திலகம் என்ற நூலின் உரையில் கூறுகிறார். ஆனால் பிரதானமாகக் கூறப்படும் கணபதிகள் சந்தான கணபதி, சுவர்ண கணபதி, நவநீத கணபதி, ஹரித்ரா கணபதி, மகா கணபதி, உச்சிஷ்ட கணபதி என்ற அறுவரும் ஆவர். மக்கள் மகாகணபதியையும், உச்சிஷ்ட கணபதியையும் அதிகமாக வழிபடுகிறார்கள். கணபதி பிரம்மசாரி என்று பொதுவாகக் கூறினும் அவர் மடிமேல் சக்தியை வைத்துக் கொண்டு வல்லப கணபதியாக இருக்கிறார் என்றே கணாபத்யர் கூறுவர். இது தவிர ஐந்து தலை கொண்டு, சிங்கத்தின் மேல் விளங்கும் ஹேரம்ப கணபதி, பாலகணபதி, ஊர்த்துவ கணபதி முதலிய மூர்த்தகளும் உண்டு. கணபதி அறிவையும் பயனையும் தருவதால் அவருக்கு சித்தி, புத்தி என்ற தேவிகளும் ÷க்ஷமம், லாபம் என்ற புதல்வர்களும் உண்டு எனக் கூறுவர். தென்னாட்டில் சித்தி, புத்தியுடன் விளங்கும் விநாயகருக்குக் கோயில்கள் இருக்கின்றன. கணாபத்யம் என்ற தனி வழிபாடு காலப்போக்கில் மறைந்துவிட்டாலும், பொதுவாக மக்கள் அனைவரும் வழிபடும் தெய்வங்களுள் கணபதியே முதல் இடம் பெறுகிறார். அவருக்கு நடப்பதே முதல் பூஜை. முச்சந்தி, நாற்சந்திகளில் இவரது கோயில்களே அதிகம்.
இவரது பூஜைக்கு உகந்த நன்னாள் ஆவணி வளர்பிறை சதுர்த்தி ஆகிய விநாயக சதுர்த்தி தினம். கணபதியை ஜைனர்களும் புத்தமதத்தினரும் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் திபெத், பர்மா, இந்தோனேசியா, ஜப்பான் முதலிய இந்து-பவுத்த நாகரிக, மணம் வீசும் நாடுகளிலும் இவர் போற்றப்படுகிறார். கணபதியைப் பற்றி வேதங்களில் கூறப்படவில்லை; சங்க நூலிலும் இல்லை. கணபதி பூஜையில் இப்போது சொல்லப்படும் மந்திரம் அக்காலத்தில் பிரமணஸ்பதி என்ற தெய்வத்திற்கே ஏற்பட்டதாகும். இவர் விக்னத்தை (இடையூறை) போக்கும் தெய்வமாகப் போற்றப்படுவதால் விக்ன கணபதி என்றும் விக்னேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அறிவிற்கும் ஆதி கர்த்தாவாகக் கருதப்படும் இவர், வியாசர் தம் பாரதத்தைச் சொன்னபோதும், சிவன் தமது தந்திர நூல்களைச் சொன்னபோதும் அவற்றை ஏட்டில் எழுதுபவராக இருந்தார் என்பது புராணக் கதை. இதைக் குறிக்கவே எதை எழுதினாலும் பிள்ளையார் நினைவாக பிள்ளையார் சுழி போடும் வழக்கம் ஏற்பட்டது போலும். கணபதியின் சிற்பம் முதன் முதலில் 2-ஆம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. 4-ஆம் நூற்றாண்டில்தான் முழு உருவமும் அங்கங்களும் காணப்படுகின்றன. சிற்பங்களில் பலவித உருவங்களோடும் பலவித ஆசனங்களில் வீற்றிருப்பவராகவும் நர்த்தனம் செய்பவராகவும் காணப்படுகிறார். கணேசானீ என்ற பெண் உருவத்தோடும், சில சமயம் பைரவாம்சத்தோடும், பெருச்சாளி இல்லாமல் மயில், தவளை, ஆமை முதலிய வாகனங்களோடும் காணப்படுகிறார். பிள்ளையாருக்கு யானை முகம் என்றே எண்ணலாகாது. கூத்தனூர் அருகில் உள்ள செதலபதியில் மனித முக விநாயகராய் அவர் விளங்குவது சிற்ப அருமைகளுள் ஒன்று.
No comments:
Post a Comment