Thursday, September 6, 2012

அடியார் தொண்டே தலை!



அடியார் தொண்டே தலை!


                             

அடியார்க்குத் தொண்டு புரிதலே தலையாயது. அவர்களுக்கு எந்தக் காலத்திலும் நாம் பணிவிடை செய்யாதிருக்கலாமோ என்று, வைணவத்தின் அடிநாதத்தை இந்தப் பாசுரத்தால் புரிய வைக்கிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் பாடியருளிய திருவாசிரியத்தில் வரும் பாசுரம் இது. "செக்கர் மா முகில் உடுத்து' என்று தொடங்கும் இந்தத் திருவாசிரியம் பாசுரங்கள், பெரும்பாலான வைணவத் தலங்களில் பெருமாள் திருவீதி உலாவின்போது சொல்லப்படும் சிறப்புடையது.

""குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம்
     மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
     முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெரு வர
     உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு உடல் தட வரை சுழற்றிய
     தனி மாத் தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே
     இசையுங்கொல் ஊழிதோறு ஊழி ஓவாதே"

(திருவாசிரியம்-3)''.

- மூன்று உலகங்களும் நல்வழிப்பட்டு உய்யும் வண்ணம், எம்பெருமான் திருவுள்ளம் பற்றுகின்றான். மூவுலகங்களும் ஒன்றுபட்டு - ஒன்றாகி நின்று - வணங்கும் புகழ் உடைய அவன் தன் ஆணையை தடையின்றிச் செலுத்துகின்றான். மும்மூர்த்திகளில் முதல்வனான அவன், ஒளிவீசும் அணிகலன்கள் உடைய விரிந்த மார்புடன், ஆரவாரம் அதிகம் கொண்ட மலைகளும் அஞ்சுகின்ற வகையில் ஒலி எழுப்பும், ஆரவாரம் உடைய குளிர்ச்சி பொருந்திய கடலின் நடுவே, படம் எடுத்தாடும் பாம்பாகிய வாசுகியின் உடலை, மந்தரை மலையில் சுற்றிக் கடைந்தான். அந்த தேவாதி தேவனுக்கு ஆட்பட்ட அடியார்களுக்கு நாம் எந்தக் காலங்களிலும் இடைவிடாது தொண்டு செய்ய வேண்டாமோ?

-இந்தப் பாசுரத்தின் சந்த நயம், படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். வரை, திரை, புரை என சந்த நயத்துடன் அமைந்திருக்கும் இந்தப் பாசுரத்தில், பாற்கடலில் எழும் அலைகள், மலைகளின் உயரத்துக்கு துள்ளி எழுந்து ஆரவாரம் செய்கின்றன என்ற இயற்கை வர்ணனையையும் காட்சிப் படுத்துகிறார் நம்மாழ்வார்.

இத்தகையை ஆரவாரம் அதிகம் கொண்ட பாற்கடலில் மந்தரை மலையில் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கட்டி பாற்கடல் கடைந்த அந்தப் பரந்தாமனின் தொண்டர்களுக்கு நாம் எப்போதும் ஊழியம் செய்ய வேண்டாவோ என்று வினவுகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் கூறும் தொண்டரின் பெருமை நாமும் அறிவோம் 

No comments:

Post a Comment