செல்வம் செழிக்கச் செய்பவன் திருக்கோஷ்டியூர் - ஸ்ரீசெளமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில்
இரண்ய கசிபு, பிரம்மனிடம் கேட்ட வரத்தால், தேவர்களும் மனிதர்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். இறுதியில் ஸ்ரீமந் நாராயணனிடமே சரண் புகுந்தனர். அவரும் இரண்யன் பெற்ற வரத்துக்கு ஊறு ஏற்படாமல் அவனை அழிப்பது குறித்து ஆலோசிக்க தேவர்களை அழைத்தார்.
பூலோகத்தில் கதம்ப மகரிஷி தன் தரிசனம் வேண்டி தவம் இருப்பதாகவும், அந்த இடத்துக்கு அசுரர் எவராலும் துன்பம் நேரக் கூடாது என்று வரம் பெற்றிருப்பதாகவும் கூறினார் ஸ்ரீவிஷ்ணு. தேவர்கள் அந்தத் தலத்துக்குச் சென்று காத்திருந்தனர். கதம்ப மகரிஷியின் தவம் பலித்தது. ஸ்ரீமந் நாராயணர் தம் திருக்கோலம் காட்டி அருளினார். அப்போது, தாம் எடுக்கப் போகும் நரசிம்ம அவதாரம் குறித்து ஸ்ரீவிஷ்ணுவும் தெரிவிக்க, தாம் அந்தக் கோலத்தை உடனே தரிசிக்க வேண்டும் என்று வேண்டினார் கதம்ப மகரிஷி. அவருக்காக அங்கே நரசிம்மர் கோலத்தை காட்டினார் ஸ்ரீவிஷ்ணு. இவ்வகையில், நரசிம்ம அவதாரம் எடுக்கும் முன்னே அதனைக் காட்டிய தலம் இது என்கின்றனர்.
தேவர்களின் திருக்கையாகிய துன்பத்தை ஓட்டிய தலம் என்பதாலும், தேவர்களும் முனிவர்களும் கோஷ்டியாக இங்கே வந்து திருமால் அருள் பெற்றதாலும் திருக்கோஷ்டியூர் எனப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது இந்தத் தலம். மூலவர் ஸ்ரீசெüமிய நாராயணர். ஸ்ரீதேவி - பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள உற்ஸவர் இந்திரனால் பூஜிக்கப்பட்டவராம். இரணியன் வதம் செய்யப்படும் வரையில் இந்தத் தலத்தே பாதுகாப்புடன் இருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்து வந்த உற்ஸவப் பெருமானை பின்னர் கதம்ப மகரிஷிக்கு அளித்தானாம். மதுகைடபர்கள், இந்திரன், புரூருவ சக்ரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மன், சரஸ்வதி, சாவித்ரி என அனைவரும் காட்சி தருகிறார்கள்.
அஷ்டாங்க விமானம்: இந்தத் தலத்தின் சிறப்பம்சம் அஷ்டாங்க விமானம்தான். மதுரை கூடல் அழகர் கோயில், உத்திரமேரூர் உள்ளிட்ட மிகச் சில தலங்களிலேயே இந்த வகை அமைப்பு காணப்படுகிறது. தேவ அசுர சிற்பிகளான விஸ்வகர்மாவும் மயனும் சேர்ந்து அமைத்த அஷ்டாங்க விமானம் இது என்பர். நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற மூன்று படிநிலைகளை உணர்த்த மூன்றடுக்கு விமானமாக உள்ளது. விமானத்தின் கீழ்த்தளத்தில் நர்த்தன கிருஷ்ணராக பூலோகப் பெருமாளாகக் காட்சி தருகிறார். விமானத்தின் முதல் தளத்தில் சயனக் கோலத்தில் திருப்பாற்கடலில் துயிலும் பெருமாளாக, இரண்டாவது தளத்தில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணராக- தேவலோகப் பெருமாளாக, மூன்றாவது தளத்தில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதராக - வைகுண்டப் பெருமாளாகக் காட்சி தருகிறார். இங்கே தாயார் நில மாமகள், குல மாமகள் என்ற திருநாமங்களுடன் தனி சந்நிதியில் எழுந்தருள்கிறார். இந்த விமானத்தின் வடப் புறத்தில் நரசிம்மர் சுதை உருவில் திகழ்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது உள்ளது சிறப்பானது. மேலும் இதில் உள்ள தட்சிணாமூர்த்தி, ஆடல்வல்லான் திருவுருக்கள் மிகவும் அழகானதும்கூட.
அஷ்டாங்க விமானத்தில் வலம் வரும்போது, ஓர் இடத்தில் தெருவைப் பார்த்தபடி ஸ்ரீராமானுஜர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். காரணம், இங்கேதான் ஸ்ரீராமானுஜர் அனைவரையும் அழைத்து எட்டெழுத்து மந்திர உபதேசம் செய்தார்.
இவ்வூரில் திருக்கோஷ்டியூர் நம்பி என்ற ஆசாரியர் வசித்து வந்தார். அவரிடம் திருமந்திர உபதேசம் பெற, ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்து வந்து, அவரின் இல்லத்துக் கதவைத் தட்டினார். அப்போது நம்பி, "யாரது?' என்று கேட்க, "நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்றார். நம்பிகளோ இல்லத்தின் உள்ளிருந்தே, "நான் அகற்றி வா' என்றார். நம்பிகள் சொல்வது புரியாமல் ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு 17 முறை நடந்தது. ஒவ்வொரு முறையும் அதே கேள்வி, அதே பதில். 18வது முறையாக வந்தபோது, யாரது என்று நம்பிகள் கேட்க, ராமானுஜர் "அடியேன்' வந்திருக்கிறேன் என்றார்.
அதைக் கேட்டு மகிழ்ந்த நம்பிகள், ராமானுஜரை அழைத்து, எட்டெழுத்து மந்திரப் பொருள் உரைத்தார். மேலும், "மோட்சத்தைப் பெறச் செய்யும் இம் மந்திரப் பொருளை வேறு யாருக்கும் உபதேசிக்க வேண்டாம், குரு சொல்லை மீறினால் நரகமே கிடைக்கும்' என்று உபதேசித்து அனுப்பினார். ஆனால், இந்தக் கோயிலின் விமானத்தில் ஏறிய ராமானுஜர் மக்கள் அனைவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்தார். கேள்விப்பட்டு வருத்தம் கொண்ட நம்பிகள், ராமானுஜரிடம் "குரு சொல்லை மீறியதால் நரகம் போவீர்' என்றார். ஆனால், ஸ்ரீராமானுஜரோ, "தமக்கு நரகம் கிட்டினும், மந்திர உபதேசம் பெற்ற சாதாரணர்களும் சொர்க்கம் செல்வரே' என்றார். இதுகேட்டு மகிழ்ந்த நம்பிகள் "நீர் என்னிலும் பெரியராக எம்பெருமானாராக ஆவீர்' என்றுகூறித் தழுவிக் கொண்டார். இந்த இடத்தில் ஸ்ரீராமானுஜரின் விக்ரஹத்துக்கு நேரே நம்பியின் வீடு தெரிகிறது. இது கல்திருமாளிகை எனப்படுகிறது.
கோயில் பிராகாரம் வரும்போது, நரசிம்மர், சுதர்ஸனர் ஆகியோரின் விக்ரஹங்கள் சிறிதளவு மண்ணில் புதையுண்டபடி இருப்பதைக் காணலாம். இந்த நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் உள்ளார். பெருமாள் சந்நிதியில் சிறிய தொட்டிலில் உள்ள சந்தான கிருஷ்ணர்- பிரார்த்தனைக் கண்ணன் புத்திர சம்பத்தை அருள்கிறார். இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் உடனடி பலன் என்பது நம்பிக்கை.
நேர்த்திக் கடன்: இங்கே விளக்கு நேர்த்திக்கடன் புகழ்பெற்றது. ஒரு அகல் விளக்கை பெருமாளின் அருகே வைத்து, பிறகு வீட்டுக்கு எடுத்துச் செல்வர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் போட்டு பூஜையறையில் வைத்து மூடிவிடுவர். இந்த விளக்கில் மகாலட்சுமியுடன் பெருமாள் வாசம் செய்வதாக நம்பிக்கை. இதனால் தங்கள் வேண்டுதல்கள் பலிப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள், மாசி தெப்பத் திருவிழாவில் இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் வைத்து வழிபடுவர். அப்போது புதிதாக வேண்டிக் கொள்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்வராம்.
ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருப்பதி. திருமணத் தடை நீக்கும் முக்கிய தலம். பெயருக்கு ஏற்ப பெருமாள் அனைத்து வளங்களையும் அருள்கிறார்.
கோயில் பிராகாரத்தில் மகாமகக் கிணறு உள்ளது. இங்கே புரூருவ சக்ரவர்த்திக்காக வடகிழக்குப் பக்கத்தில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் நடுவே பெருமாள் காட்சி தந்தாராம். மகாமகத்தின் போது, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார்.
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
தகவலுக்கு:04577-261122
No comments:
Post a Comment